×

மதுரைக் கோட்ட இரயில்வே காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதுரைக் கோட்ட இரயில்வே காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, பிப்ரவரி 2 ஆம் தேதி ஒன்றிய இரயில்வே அமைச்சர்.அஸ்வினி வைஷ்ணவ் இரயில்வே தேர்வு வாரியங்கள் மூலம் 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப் படும் என்று தெரிவித்து, அதற்கான கால அட்டவணையை வெளியிட்டார்.

இதன்படி தெற்கு இரயில்வேயில் சுமார் 10,000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் மதுரைக் கோட்டத்தில் உள்ள 750 காலி பணியிடங்களும் அடங்கும். தெற்கு இரயில்வேயில், சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் என மொத்தம் ஆறு கோட்டங்கள் உள்ளன. தெற்கு இரயில்வேயில் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் இரயில்வே தேர்வு வாரியங்கள் (Railway Recruitment Board) செயல் பட்டு வருகின்றது. முன்பு சென்னை, திருச்சி, சேலம் மற்றும் மதுரைக் கோட்டக் காலியிடங்கள் சென்னை தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.

பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்ட காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.ஆனால் தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இரயில்வே நிர்வாகத்தின் இந்த தவறான முடிவினால் தமிழக இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய 750 காலி பணியிடங்கள் கேரள மாநிலத்திற்கு செல்ல உள்ளது. இதனால் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் அநீதியாகும். ஒன்றிய இரயில்வே அமைச்சருக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.

1990 காலகட்டங்களில் ஜாபர் ஷெரீஃப் ஒன்றிய இரயில்வே அமைச்சராக இருந்பொழுதுதான் மொழி வாரி மாநிலங்களின் அடிப்படையில் இரயில்வே தேர்வு வாரியங்கள் உருவாக்கப்பட்டது. மேலும் சில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். முன்பு கர்நாடக மாநிலம் ஹுப்பிலி கோட்டமானது செகந்திராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரயில்வேயின் கீழ் இருந்தது. ஆனால் அந்தக் கோட்டத்தின் காலியிடங்கள் முன்பு தெற்கு இரயில்வேயில் இருந்த பெங்களூரு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. அதேபோல ஆந்திராவைச் சேர்ந்த விசாகப்பட்டினம் கோட்டம் புவனேஸ்வரத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்கரை ரயில்வேயில் (East Coast Railway) கீழ் வருகிறது.

புவனேஸ்வரத்தில் ஒரு இரயில்வே தேர்வு வாரியம் உள்ளது ஆனாலும் ஆந்திர இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக அங்கு ஏற்படும் காலியிடங்களை தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள செகந்திராபாத் தேர்வு வாரியம் மூலமாகவே இன்றும் நிரப்பப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதி என்று வகுத்து வைத்துள்ளது பெரும் கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தில் ஏற்படும் வேலை வாய்ப்பு கேரள இளைஞர்களுக்குச் செல்லும் விதமாக உள்ள தற்போதைய நடமுறையை மாற்றி, மதுரைக் கோட்ட காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் தான் நிரப்பப்பட வேண்டும். இதற்கான உத்தரவினை ஒன்றிய இரயில்வே அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post மதுரைக் கோட்ட இரயில்வே காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Madurai Division ,Chennai Selection Board ,VAICO ,Union Govt. ,CHENNAI ,Union Government ,Union Railway ,Minister ,Ashwini Vaishnav ,
× RELATED மதுரை கோட்டத்தில் ஒரே நாளில் ரூ.55.84 கோடிக்கு மது விற்பனை