×

மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36 கோடி கடன் உதவி வழங்கல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 600 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ரூ.36 கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மதி எக்ஸ்பிரஸ் மின்வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.விழாவிற்கு கலெக்டர் அருணா தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பாலகணேஷ் வரவேற்றார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் மருத்துவம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடும் வகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 55 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓரிரு மாதத்தில் ஊட்டியில் 700 படுக்கை வசதிக் கொண்ட மருத்துவமனை துவக்கப்படவுள்ளது.

அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கியுள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் 600 பேருக்கு ரூ.36 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கியதே மறைந்த முதல்வர் கருணாநிதி. மகளிர் குழுக்கள் தற்போது பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.அதேபோல், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெறும் கடன் தொகைகளை முறையாக வங்கிகளில் செலுத்தி வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக விவசாய கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்களை ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தது போல, திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் கடன்களை ரத்து செய்தது மட்டுமின்றி, மீண்டும் அவர்களுக்கு கடன்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார்.தமிழ்நாடு முதல்வர், வரும் 2030க்குள் ஒரு 1 பில்லியன் டாலர் பொருளாதார நிலையை உருவாக்குவேன் என்ற நோக்கத்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ்களிலும் மகளிர் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கேட்டுள்ளேன்.விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000ம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும், பல்வேறு பகுதிகளிலும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். சுற்றுலா தொழில் வளர்ந்தால், பொருளாதாரம் வளரும்.வேலை வாய்ப்பும் அதிகம் கிடைக்கும்.

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக சுற்றுலா தலங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊட்டி படகு இல்லத்தில் ரூ.100 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார். இவ்விழாவில், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36 கோடி கடன் உதவி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Tamil Nadu Women's Development Corporation ,Madhi Express ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்