×

திருத்துறைப்பூண்டி அருகே 200 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் அறுவடை

*ஆராய்ச்சி மாணவர்கள், அரசு கண்காட்சிக்கு வழங்க முடிவு

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அருகே 200 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. இதை ஆராய்ச்சி மாணவர்கள், அரசு கண்காட்சிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் நெல்ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய இயற்கை வேளாண் பண்ணையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அழிவின் விளிம்பு நிலையிலுள்ள மற்றும் மருத்துவ குணம் நிறைந்த 200 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு, சுற்றுசூழலுக்கு உகந்த இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்து பாதுகாக்கப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

இது குறித்து பாரம்பரிய நெல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் கூறியதாவது,பாரம்பரிய நெல் ரகங்களில் 60 நாள் வயதுடைய அறுபதாங்குறுவை முதல் 200 நாள் வயதுடைய ஒட்டடையான் நெல் ரகம் வரை நம்மிடம் புழக்கத்தில் இருந்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து பரவலாக்கம் செய்யும் விதமாக இந்த 200 வகையான நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளது.

எல்லாவித சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளக்கூடிய திறனும், வறட்சிக்கு, வெள்ளத்திற்கு, பனிகாலத்திற்கு, களர் நிலத்திற்கு, உவர் நிலத்திற்கு, களிமண் பகுதிக்கு, பள்ளமான பகுதிக்கு, மேட்டுப்பாங்கான பகுதிக்கு என ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு வகையான நெல் ரகங்கள் உள்ளது. இந்த நெல் ரகங்களை பயிரிட்டு சாகுபடி செய்வதன் மூலம் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இடர்பாடுகளையும் கடந்து இந்தாண்டு பாரம்பரிய நெல்ரகங்கள் நல்ல மகசூலை தந்துள்ளது.

அறுவடை செய்யப்படும் இந்த 200 வகையான நெல் ரகங்கள் தமிழகம் முழுவதுமுள்ள வேளாண் கல்லூரி மாணவ , மாணவிகளுக்கும் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கவும், கல்லூரிகளில் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த கண்காட்சி அமைக்கவும், பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும், கல்லூரி மற்றும் பல்கலைகழகங்ககளில் தகுந்த ஆவணங்கள் பெறப்பட்டு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசின் வேளாண்மை துறைக்கு கண்காட்சிகள் அமைப்பதற்கும் வழங்கப்படுகிறது.

பாரம்பரிய இயற்கை வேளாண்மையில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடிக்கு மட்கிய தொழு உரம் மற்றும் இயற்கை முறையிலான இடுபொருள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும், இயற்கையாக நாட்டு மாட்டிலிருந்து கிடைக்கின்ற சாணம், கோமியம், வெள்ளம், ஈஸ்ட், பழங்கள் போன்ற பொருட்களிலிருந்து பயிருக்கு ஊட்டமளிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட திரவ இடுபொருட்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், முட்டை அமில கரைசல், மீன் அமில கரைசல், தேமோர் கரைசல், இயற்கை முறை பூச்சி விரட்டிகளான ஐந்திலை கரைசல், ஏழிலை கரைசல், தசகாவியம் அக்கினி அஸ்திரம் போன்ற இடுபொருட்கள் கொண்டு பராமரிக்கப்படுகிறது.இதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதுடன், நிலம், நீர், காற்றில் மாசுக்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கப்பட்டு நீர்வாழ் உயிரினங்களும் , கால்நடைகளும் பாதுகாக்கப்படுகிறதுஇவ்வாறு அவர் கூறினார்.

The post திருத்துறைப்பூண்டி அருகே 200 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் அறுவடை appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Thiruthurapoondi ,Adirengam Neljayaraman ,
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்