×

அவர்களுக்கு குடும்பம்.. எங்களுக்கு தேசம்.. காங்கிரஸ் முதலை கண்ணீர் வடிக்கிறது: நிர்மலா சீதாராமன் விளாசல்!

டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்த தவறுகளை சரி செய்ய 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான ஐமு கூட்டணி ஆட்சியின் பொருளாதாரம் குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 54 பக்க வெள்ளை அறிக்கையை நேற்று தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கை குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்த தவறுகளை சரி செய்ய 10 ஆண்டுகள் தேவைப்பட்டது.

2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முறையாக கையாளவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு மறைமுகமாக காங்கிரஸ் அரசு சலுகைகளை வழங்கியது. 2008ல் உலக பேரிடரை எதிர்கொள்ள முடியாதவர்கள், இன்று பேரிடரை எதிர்கொள்வது பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். பலவீனமாக இருந்த பொருளாதாரத்தை கடும் சவால்களுக்கு இடையே பாஜக அரசு மீட்டுள்ளது.

2014-ல் மிகவும் மோசமான நிலையில் இருந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை ஒன்றிய அரசு திறம்பட கையாண்டது. காங்கிரஸ் கட்சி குடும்பத்தை முன்னிறுத்தியது; ஆனால் பாஜக ஆட்சியில் நாட்டை முன்னிறுத்துகிறோம். டெல்லியில் 12 நாட்கள் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடைபெற்ற ஊழல்களை ஒட்டுமொத்த உலகமும் நன்கு அறியும். முந்தைய ஆட்சியில் குட்கா தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டது.

நிலக்கரி சுரங்கம் அமைக்க உரிமம் வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நிறுவனங்கள் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது; தேசமே இருளில் மூழ்கியது. பின்பக்க கதவு வழியாக எங்கள் உறவினர்கள் நிலக்கரி சுரங்கத்தின் உரிமம் பெறுவதை நாங்கள் தடுத்தோம். நிலக்கரியை காங்கிரஸ் அரசு சாம்பலாக வீணடித்தது; பாஜக அரசு வைரமாக பட்டை தீட்டியது. நிலக்கரி சுரங்க ஊழலால் மத்திய அரசுக்கு ரூ.1.6லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. ஆட்சிக்காலத்தில் தவறு செய்துவிட்டு இப்போது காங்கிரஸ் முதலை கண்ணீர் வடிக்கிறது.

மன்மோகன் சிங் ஆட்சியில் பொருளாதாரக் கொள்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. மக்களவையில் எனது உரையை கேட்டு பதில் சொல்ல தயாரா என எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் சவால் விடுத்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post அவர்களுக்கு குடும்பம்.. எங்களுக்கு தேசம்.. காங்கிரஸ் முதலை கண்ணீர் வடிக்கிறது: நிர்மலா சீதாராமன் விளாசல்! appeared first on Dinakaran.

Tags : Congress ,Nirmala Sitharaman ,Delhi ,EU ,Finance Minister ,AIMU ,Crocodile ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...