×

ஈரோடு மாவட்டத்தில் 5 திருக்கோயில்களில் ரூ.4.76 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (09.02.2024) ஈரோடு மாவட்டம், திண்டல் அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் வளாகத்தில். 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 5 திருக்கோயில்களில் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், புதிய இராஜகோபுரங்களை கட்டுதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (09.02.2024) ஈரோடு மாவட்டம், திண்டல் அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அத்திருக்கோயிலுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம், சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.93 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பசுமடம், தங்கமேடு, அருள்மிகு தம்பிக்கலை அய்யன் சுவாமி திருக்கோயிலில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வணிக வளாகம், பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.51 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை மணிமண்டபம் மற்றும் ரூ.34.50 இலட்சம் மதிப்பீட்டிலான பணியாளர் குடியிருப்பு மராமத்துப் பணிகள், அந்தியூர், அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் திருமதில் சுவர் கட்டும் பணி என மொத்தம் 5 திருக்கோயில்களில் ரூ.4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

இப்பணிகளில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டிலான பணி உபயதாரர் நிதியின் மூலமாகவும், ரூ.2.65 கோடி மதிப்பீட்டிலான பணிகள் அந்தந்த திருக்கோயில் நிதியின் மூலமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா, இ.ஆ.ப., மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம், ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி. பரஞ்சோதி, துணை ஆணையர் இரா.மேனகா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், மொ.அன்னக்கொடி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஈரோடு மாவட்டத்தில் 5 திருக்கோயில்களில் ரூ.4.76 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekarbabu ,Erode district ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,K. ,Stalin ,Minister of Housing and Urban Development ,Shri. ,MUTHUSAMI ,HINDU RELIGIOUS ,P. K. Sekharbabu ,Dindal Arulmigu Velayutha Swami Temple ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...