புண்ணிய காலமாகிய உத்திராயணத்தின் முதல் மாதமாக இருப்பது தையின் சிறப்புகளில் ஒன்று. தை மாதம் சிறப்புடையது என்றால், தையில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் பூச நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் சப்தமி (ரத சப்தமி) சிறப்புடையது. அஷ்டமி (பீஷ்மாஷ்டமி) திதி சிறப்புடையது. அந்த வகையில் தையில் வரும் அமாவாசை மிகமிகச் சிறப்புடையது. தட்சிணாயன காலத்தில் முதல் மாதமான ஆடி மாத அமாவாசை எத்தனை சிறப்புடையதோ, அதை போன்ற உத்தராயண காலத்தின் முதல் மாதமான தைமாத அமாவாசையும் சிறப்புடையது.
கிரக தோஷமற்ற அமாவாசை
பொதுவாக நிறைமதி நாளான பௌர்ணமியில் தெய்வ பூஜைகள் பிரசித்தமாக நடைபெறும். இது வளர்பிறையாகும். அதற்கு அடுத்த நாள் தேய்பிறை தொடங்கி விடும். அதன் நிறைவு நாளாகிய அமாவாசை நாள் என்பது முன்னோர் வழிபாட்டுக்கு ஏற்ற நாள் என்று நம்முடைய சமய மரபில் அமைத்து தந்திருக்கிறார்கள் பொதுவாக திதிகள் 15 இருக்கின்றன இதில் அமாவாசை திதி முக்கியமானது. மற்ற திதிகளின் ஏதாவது ஒரு கிரகம் தோஷம் அடையும். ஆனால் அமாவாசை அன்று எந்த கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களைத் தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு-கேது மற்றும் கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமாவாசை அன்று பரிகாரம் செய்ய வேண்டும் என்பார்கள்.
மகரத்தில் வரும் மறைமதி நாள்
அமாவாசை என்பது சந்திரனும் சூரியனும் ஒன்றாக இணையும் நாள். இந்த தினத்திற்கு “பிதுர் திதி” என்ற பெயரும் உண்டு. சந்திரன் முழுமையாக மறைந்திருப்பதால், இந்நாளை “மறைமதி நாள்” என்று அழைப்பர். அதில் தை மாதம் என்பது மகர மாதம். சனியினுடைய ராசிக்கு உரிய மாதம். கர்மகாரகனான சனியினுடைய ராசியில் சூரியனும் சந்திரனும் இணையும் நாள்தான் அமாவாசை. சனி சூரியனின் பிள்ளை என்று வரலாறு. அதன்படி பார்த்தால் அப்பனாகிய சூரியனும், அன்னையாகிய சந்திரனும், பிள்ளையாகிய சனியின் வீட்டில் ஒன்றிணைகின்ற அற்புத நாள்தான் தை அமாவாசை. எனவே அன்று முன்னோர்களை நினைத்து வழிபாடு இயற்றுவது மிக முக்கியமாகச் சொல்லப்படுகின்றது.
ஏன் முக்கியம் தை அமாவாசை?
பொதுவாகவே 96 நாட்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் வரையறுத்து வைத்திருக்கிறது. தெய்வ வழிபாடு குறைந்தாலும், நீத்தார் வழிபாடு குறையக் கூடாது என்பது சங்க காலத்தில் இருந்து பின்பற்றப்படுகின்ற ஒரு நிலையான விதி. அது மட்டுமில்லை நீத்தார் வழிபாடு நிறைவேற்றாமல், நாம் தெய்வ வழி பாட்டுக்கு வரவே முடியாது. அதனால்தான், எந்த சுபகாரியங்கள் நடந்தாலும்கூட, அதன் தொடக்க நிகழ்ச்சியாக “நாந்தி ச்ராத்தம்” அல்லது “நாந்தி சோபனம்” என்று முன்னோர்கள் வழிபாட்டை செய்துவிட்டு, பிறகுதான் சுபகாரிய வழிபாட்டைத் துவங்குகின்றார்கள்.
தை மாத அமாவாசை கட்டாயம்
96 நாள்களிலும் (ஷண்ணவதி) நீத்தார் வழிபாடு நிறைவேற்றுவது இக்காலத்தில் கடினம் என்றாலும், 12 மாதப்பிறப்புகளிலும், 12 அமாவாசைகளிலும், ஆக 24 நாள்களிலும் மற்றும் அவர்கள் மறைந்த திதியில் ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படும் வழிபாட்டையும் சேர்த்தால், 25 வழிபாடுகள் செய்ய வேண்டும். இதை முறையாகச் செய்ய முடியாதவர்கள், குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் வருகின்ற அமாவாசை நாள் அன்று நீத்தார் வழிபாட்டை நிறைவேற்ற வேண்டும். அதுவும் இயலாதவர்கள், உத்தராயண கால முதல் மாதமான தை மாத அமாவாசையிலாவது இந்த வழிபாட்டை கட்டாயம் செய்ய வேண்டும்.
ஏன் இந்த நாளில் செய்ய வேண்டும்?
இந்த நாளில் முன்னோர்களுக்கு அதிகமான பசியும் தாகமும் ஏற்படும் என்பதால், எள்ளும் நீரும் அவர்களுக்கு வழங்குகின்றோம். இந்தத் தர்ப்பணம் செய்யும் பொழுது, வலது கை குழித்து, சுட்டு விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீர் வார்க்க வேண்டும். இந்த தர்ப்பண நீர் பூமியின் ஈர்ப்பு சக்தியையும் மீறி மேலே எழும்பும் என்பது ஐதீகம். ஸ்வதா தேவி (ஸ்வதா நமஸ் தர்பயாமி) எனப்படும் தேவதை, நம்முடைய முன்னோர்கள் எத்தனை கோடி மைல்களுக்கு அப்பால், அண்டங்களுக்கு அப்பால் இருந்தாலும்கூட, தேடிச்சென்று, இந்த வழிபாட்டு பிரசாதங்களைத் தந்து, அவர்களுடைய தாகத்தையும் பசியையும் ஆற்றி, ஆசியை பெற்று தருகிறாள். இதுவரை பித்ருக்களுக்கு தர்ப்பணம் போன்ற கர்ம காரியங்களை செய்யாதவர்கள்கூட “தை அமாவாசை” அன்று செய்து அளவிட முடியாத பலனைப் பெற வேண்டும்.
என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
நீர் நிலைக்குச் செல்ல முடியாதவர்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்றவர்களுக்கு உணவு தந்து அருகாமையில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். இந்த நாளில் முழு விரதம் இருக்க வேண்டும். அசைவ உணவு சாப்பிடக்கூடாது. பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், பச்சரிசி, வெல்லம் முதலியவை கொடுக்கலாம். அரச மர வழிபாடு செய்யலாம். ஏழைகளுக்கு உணவு, உடை வழங்கலாம். நகம் வெட்டுதல், முடிவெட்டுதல், முக சவரம் செய்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது.
The post மன அமைதிக்கு தைமாத அமாவாசை!! appeared first on Dinakaran.