ராமநாதபுரம், பிப்.9: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் திட்ட உதவிகள் வழங்கி காணொளியின் மூலம் இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் துவக்கி வைத்தார். இதையொட்டி, ராமநாதபுரத்தில் மாவட்ட மகளிர் திட்டத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம்,முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 58 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4 கோடியே 75 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சுழல் நிதி கடனுக்கான ஆணையினையும், தலா ரூ.3,20,000 மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு மதி எக்ஸ்பிரஸ் பேட்டரி பொருத்தப்பட்ட ஆட்டோ வாகனத்தையும் என மொத்தம் 61 குழுக்களுக்கு ரூ.4 கோடியே 85 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட இயக்கம் மேலாண்மை அலுவலர் ஸையித் சுலைமான், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் சுப்புலெட்சுமி ஜீவானந்தம் (மண்டபம்), புல்லாணி (திருப்புல்லாணி), தமிழ்ச்செல்வி (கமுதி) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post 61 மகளிர் குழுக்களுக்கு ரூ.4.85 கோடி நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.