×

பயிர் அறுவடை பரிசோதனைக்கு இடையூறு செய்வோர் மீது குற்ற வழக்கு பதியப்படும்: அனைவரும் ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் வேண்டுகோள்

 

திருவாரூர், பிப். 9: திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மகசூலை கணக்கிட 2 ஆயிரத்து 280 பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன்படி, ஒவ்வொரு கிராமத்திலும் தலா 4 இடங்களில் புள்ளியியல் துறையினால் வழங்கப்பட்ட எதேச்சை எண் மூலம் சர்வே எண் கண்டறியப்பட்டு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் சில கிராமங்களில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள வேளாண், வருவாய், புள்ளியியல் துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவன அலுவலர்கள் செல்லும் போது அக்கிராமத்து விவசாயிகள் அத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

பயிர் அறுவடை பரிசோதனை செய்யும் இடத்தில் சம்பந்தப்பட்ட சர்வே எண்ணின் சாகுபடி தாரரும், வேளாண்மைத் துறை, புள்ளியியல் துறை, வருவாய்த் துறை மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவார்கள். இதைத் தவிர வேறு எந்தவொரு அலுவலரோ, விவசாயிகளோ அல்லது தனிநபர்களோ இருந்தால் பயிர் அறுவடை பரிசோதனை நடத்த இயலாமல் அச்சோதனை பயிர் காப்பீட்டு நிறுவனத்தினால் ஆட்சேபிக்கப்படும்.

இதனால், மேற்படி கிராமத்திற்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க இயலா நிலை ஏற்படும். எனவே பயிர் அறுவடை பரிசோதனைக்கு ஏதாவது இடையூறுகள் விளைவித்தால் அத்தகைய நபர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் இதனால் தங்கள் கிராமங்களில் நடைபெறவுள்ள பயிர் அறுவடை பரிசோதனையை சரியான முறையில் செய்ய அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

The post பயிர் அறுவடை பரிசோதனைக்கு இடையூறு செய்வோர் மீது குற்ற வழக்கு பதியப்படும்: அனைவரும் ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Sarusree ,Dinakaran ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு