×

யானைகவுனி மேம்பால கட்டுமானம் இந்த ஆண்டுக்குள் ஒருவழிப்பாதை பணிகளை முடிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை, பிப்.9: யானைகவுனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பின், இந்த ஆண்டுக்குள் ஒருவழிப்பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சி மற்றும் உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தீவிர தூய்மைப் பணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட மருதம் காலனியில் உள்ள பொது இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேங்கியிருந்த குப்பை மற்றும் மரக்கழிவுகளை அகற்றும் பணியை ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்திடவும், வீடுகள் தோறும் சேகரிக்கப்படும் குப்பை சேகரித்தல் பணியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, குப்பையை முறையாக தரம் பிரித்து வழங்கிடவும், டியூப் லைட், பாட்டில்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்களை பொது இடங்களில் வீசுவதை தவிர்க்கவும், குப்பை போடுவதற்கு குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்திடவும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். மரங்களை வெட்டி அகற்றும் பணிகளில் தொடர்புடைய அனைத்து பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதை தொடர்ந்து, ராயபுரம் மண்டலம், வார்டு-60க்குட்பட்ட அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கலந்துரையாடினார்.

பின்னர், யானைகவுனி மேம்பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணியை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பிப்ரவரி 2024க்குள் ஒருவழிப்பாதை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழு தலைவர் ராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் ஜெயின், இசட். ஆசாத், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post யானைகவுனி மேம்பால கட்டுமானம் இந்த ஆண்டுக்குள் ஒருவழிப்பாதை பணிகளை முடிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Yanagauni ,Chennai ,Commissioner ,J. Radhakrishnan ,Chennai Corporation ,Urpesar Sumeeth ,Yayankauni ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...