×

சென்னையில் 2ம் கட்ட வழித்தடத்தில் இயக்குவதற்கு டிரைவர் இல்லாத 36 மெட்ரோ ரயில்கள் உற்பத்தி: மேலாண்மை இயக்குநர் தொடங்கி வைத்தார்

தாம்பரம், பிப்.9: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு டிரைவர் இல்லாத 36 மெட்ரோ ரயில்களின் உற்பத்தியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் நேற்று அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம், ஸ்ரீசிட்டியில் தொடங்கி வைத்தார். விழாவில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் அனில்குமார் சைனி, உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகள் கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடி மதிப்பில் (வரிகள் உள்பட) வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு போன்றவை அடங்கும். ஒப்பந்தம் வழங்கப்பட்ட பிறகு, வடிவமைப்பு ஆய்வுகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை உற்பத்தியாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம், சிட்டியில் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் முதல் மெட்ரோ ரயில் ஆகஸ்ட் 2024ல் பூந்தமல்லி பணிமனையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

மெட்ரோ ரயில் பெட்டிகளின் உற்பத்தியை முடித்த பிறகு, அல்ஸ்டோம் நிறுவனம் பொருத்துதல் மற்றும் மெட்ரோ ரயில் பெட்டிகளை இணைத்தல் ஆகியவற்றை தொடரும். முன்னதாக உற்பத்தியாளர் வளாகத்தில் தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். மெட்ரோ ரயில் தொடர் விநியோகத்தை தொடர்ந்து, 2025ல் பயணிகளின் சேவையை தொடங்குவதற்கான சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெறுவதுடன், மெட்ரோ ரயில் கட்டம்-2 வழித்தடத்தில் பல்வேறு நிலையில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2ல் இயக்கப்படும் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு அம்சங்களை வழங்குவதன் மூலம் நகர்ப்புற போக்குவரத்தை மறுவரையறை செய்கிறது. 1000 பயணிகள் வரை பயணிக்கும் திறன் கொண்ட மூன்று பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரயில்கள் உட்புறத்தில் விசாலமான இடங்களை வழங்குவதன் மூலம் தடையற்ற உள்நகர்வுக்கான அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன.

குளிரூட்டப்பட்ட சூழல், பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக இடங்களுடன் சிறந்த வசதியை வழங்கும். அவசரகால வெளியேற்ற கதவுகள், தீ அணைக்கும் கருவிகள் மற்றும் தடைகளை கண்டறியும் கருவிகள் போன்ற நடவடிக்கைகள் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. ரயில்களில் ஆற்றல் திறனுக்காக மீளுருவாக்கம் செய்யக்கூடிய பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்கள் நகர்ப்புற போக்குவரத்தில் ஒரு புதிய தரநிலையை அமைத்து, வசதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும்.

டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயிலின் சிறப்பு அம்சங்கள்:
 ஆட்டோமேஷன் நிலை 4
 வடிவமைப்பு வேகம் மணிக்கு 90 கி.மீ. மற்றும் செயல்பாட்டு வேகம் மணிக்கு 80 கி.மீ.
 ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் 3 பெட்டிகளை கொண்டது.
 67.8 மீ நீளம் மற்றும் 2.9 மீ அகலம் கொண்ட துரு பிடிக்காத ஸ்டீல் பெட்டிகளை கொண்டது.
 ஒவ்வொரு 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயிலில் சுமார் 1000 பயணிகள் பயணிக்கலாம்.

பயணிகளை மையமாகக்கொண்ட சிறப்பு அம்சங்கள்:
 பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏதுவாக அகலமான உட்புறத்தை கொண்டது.
 குளிரூட்டப்பட்ட பெட்டிகள்
 பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக இடங்கள்.
 நிற்கும் பயணிகளின் கூடுதல் வசதிக்காக பெர்ச் இருக்கைகள்.
 பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்
 மொபைல்கள் மற்றும் மடிக்கணினிகளை பயன்படுத்தும் வசதிக்காக சார்ஜிங் சாக்கெட்டுகளும் பொருத்தப்படும்

மகளிர் பயணிகளுக்கான வசதிகள்
 பெண்களுக்கு பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியை தனித்துவமாக காட்ட கைப்பிடிகளில் வெவ்வேறு வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 மற்ற பெட்டிகளை ஒப்பிடுகையில் குறைந்த உயரத்தில் கைப்பிடிகள் நிறுவப்படுகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்
 இரண்டு சக்கர நாற்காலிகள் நிறுத்துவதற்கு கைப்பிடியுடன் கூடிய பிரத்யேக இடம்.
 ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் நிறுத்தக் கோருவதற்காக நாற்காலி பகுதியில் பொத்தான் வசதி.

நிகழ்நேர தகவல், பொழுதுபோக்கு
 பயணிகள் எளிதாக செல்வதற்காக, அனைத்து கதவுகளுக்கும் மேல் நிகழ்நேர வழித்தடத்தின் வரைபடங்கள் எல்சிடி திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது.
 கூடுதல் தகவல் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பக்கவாட்டிலும் எல்சிடி திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்
 எதிர்பாராத சூழ்நிலைகளில் உடனடியாக செயல்படுவதற்காக மெட்ரோ ரயிலில் தீ மற்றும் புகை கண்டறிய அமைப்புகள் பொருத்தப்படுகின்றன.
 அவசர காலத்தில் வெளியேறுவதற்காக முன்பகுதியில் கதவு அமைக்கப்பட்டுள்ளது
 இருக்கைகளுக்கு அடியில் தீ அணைப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 ரயில்களின் இயக்கத்தில் தடைகள் மற்றும் தடம் புரள்வதைக் கண்டறிய, தண்டவாளத்தில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
 பயணிகளின் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள்
 துல்லியம் மற்றும் செயல்திறனுக்காக நுண்செயலி கட்டுப்படுத்தப்பட்ட பிரேக்குகள்.
 பயணிக்க வசதியாக ஏர் சஸ்பென்ஷன் அமைப்புகள்
 பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதிநவீன கதவுகள் பொருத்தப்படுகின்றன
 ஒவ்வொரு கதவுகளிலும் கதவு மூடுதல் மற்றும் திறக்கும் நிலையைக் காட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
 மின்சாரம் மீளுருவாக்கம் செய்யும் அதிநவீன பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
பயணிகள் அறிவிப்பு, செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்திற்கான தொடர்பு
 பயணிகள் அறிவிப்பு அமைப்புகளுடன் கூடிய டிரைவர் இல்லாத ரயில்கள், சரியான நேரத்தில் பயணம் முழுவதும் தகவல் பரவலை உறுதி செய்கின்றன.
 செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்துடன் பயணிகள் தொடர்பு கொள்ள வசதியாக கூடுதல் நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

The post சென்னையில் 2ம் கட்ட வழித்தடத்தில் இயக்குவதற்கு டிரைவர் இல்லாத 36 மெட்ரோ ரயில்கள் உற்பத்தி: மேலாண்மை இயக்குநர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Managing ,Chennai Metro Rail Company ,Managing Director ,Siddique ,Chennai Metro Rail ,Alstom Transport India ,Sricity ,Chennai ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு...