×

முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட வழக்குகளில் பிப். 27, 28, 29ல் விசாரணை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

சென்னை: இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வரும் 27, 28, 29 மற்றும் மார்ச் 5ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தற்போதைய அமைச்சர்கள், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டது மற்றும் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

அதேபோல முன்னாள் அமைச்சர்களான, பொன்முடி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதனிடையே இதற்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்குகளை யார் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகள் பிப்ரவரி 27, 28, 29 மற்றும் மார்ச் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

 

The post முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட வழக்குகளில் பிப். 27, 28, 29ல் விசாரணை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Justice ,Anand Venkatesh ,CHENNAI ,Thangam Tennarasu ,K.K.S.S.R. Ramachandran ,Justice Anand Venkatesh ,Dinakaran ,
× RELATED பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன...