×

திருத்தணியில் யாத்திரை ரூட்டை மாற்றிய அண்ணாமலையால் மணிக்கணக்கில் தவித்த தொண்டர்கள்: காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கும் அனுமதியில்லை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி ‘என் மண் என் மக்கள்’ என்ற யாத்திரயை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று மதியம் 12.30 மணிக்கு திருத்தணிக்கு வந்தார். காட் ரோட்டில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். அங்கிருந்து அரக்கோணம் சாலை ம.பொ.சி சாலை வழியாக திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

தொடர்ந்து, ஸ்டேட் பாங்க் அருகே உரையாற்றினார். காலை 11 மணிக்கு திருத்தணி மலை கோயிலுக்கு செல்லும் காட் ரோட்டிலிருந்து பாதயாத்திரை தொடங்குவதாக கூறப்பட்டிருந்தது. இதற்காக திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து கட்சியினர் மற்றும் தொண்டர்கள் 9 மணிக்கே வந்து காத்திருந்தனர். ஆனால், நண்பகல் வரை அண்ணாமலை வராததால் தொண்டர்கள் சோர்வடைந்தனர். அதேபோன்று, மலை கோயிலுக்கு செல்லும் பாதையில் அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.

அண்ணாமலை வருகையை முன்னிட்டு போலீசார் மலை கோயிலுக்கு எந்த வாகனத்தையும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். அண்ணாமலை தாமதமாக வந்ததால் முருகப்பெருமானுக்கு மயில் காவடியுடன் செல்வது கைவிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பாஜவினர் அனுமதி இன்றி திருத்தணி – அரக்கோணம் சாலை, ம.பொ.சி சாலை, அக்கைய நாயுடு சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் சாலையை மறித்தும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பேனர்களை வைத்திருந்தனர்.

இதனால் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பேனர் வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையர் அருள், திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருத்தணியில் யாத்திரை வந்த பாஜ மாநில தலைவர் கே.அண்ணாமலை தொண்டர்களிடையே உரையாற்றினார். இதில் மாநில துணைத் தலைவர் நல்லாட்டூர் எம்.சக்கரவர்த்தி, மாவட்ட தலைவர் எம்.அஸ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா, டாக்டர் ஸ்ரீ கிரண், மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருத்தணியில் யாத்திரை ரூட்டை மாற்றிய அண்ணாமலையால் மணிக்கணக்கில் தவித்த தொண்டர்கள்: காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கும் அனுமதியில்லை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Tiruthani ,Kavadi ,Chennai ,Tamil Nadu ,BJP ,President ,Rameswaram ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...