×

மோடி வந்த பிறகுதான் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது ஐமு கூட்டணி ஆட்சியில் பொருளாதாரம் மோசமடைந்தது: ஒன்றிய அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஐமு கூட்டணி ஆட்சியில் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது என்றும் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகுதான் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான ஐமு கூட்டணி ஆட்சியின் பொருளாதாரம் குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 54 பக்க வெள்ளை அறிக்கையை நேற்று தாக்கல் செய்தார்.

அதில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2004-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது, நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்தது. அதோடு, சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஏற்றதாகவும் இருந்தது. 1991-ல் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தவறிவிட்டது.அதோடு, 2004-ல் ஆட்சிக்கு வந்த அவர்கள் அந்த சீர்திருத்தங்களை கைவிட்டார்கள். 10 ஆண்டு ஐமு ஆட்சியின் பல தவறான முடிவுகளால் 2014ல் இந்திய பொருளாதாரம் மோசமடைந்தது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது நாட்டின் பொருளாதார கொள்கைகள் பல தவறான திசைகளில் சென்று முன்னேறுவதற்கு வழி இல்லாத நிலையில் சிக்கி இருந்தது. உடனடியாக சரிசெய்ய வேண்டிய நிலையில் நாட்டின் பொருளாதாரம் இருப்பதை உணர்ந்தோம். மிகப் பெரிய பொருளாதாரத்துக்கான அடித்தளத்தை மேம்படுத்தும் அதே வேளையில், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு ஏற்ப அமைப்புகளையும் செயல்முறைகளையும் மறுசீரமைக்கும் பணிகளை மேற்கொண்டோம். 2014ல் மோடி அரசு நிதி பற்றாக்குறை, வங்கி நெருக்கடி,ஊழல் உள்ளிட்ட சவால்களை சமாளிக்க கடினமான முடிவுகளை எடுத்தது.

2013 ம் ஆண்டு ஐமு அரசின் கீழ், அன்னிய செலாவணி கையிருப்பு 6 மாதங்களுக்கும் மேலான இறக்குமதிகளுக்கு நிதியளிக்க போதுமானதாக இருந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதைச் சமாளிக்க, அரசாங்கம் வெளிநாட்டு நாணயத்தை வெளியில் கொண்டு வந்தது. ஆகஸ்ட்-செப்டம்பர் 2013 ல் அதிக பிரீமியத்தில் அமெரிக்க டாலர்கள் டெபாசிட்களை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு இந்தியர்களுக்கான டெபாசிட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த பத்து வருடங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​முந்தைய சவால்களை வெற்றிகரமாகச் சமாளித்துவிட்டோம். வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம் உள்ளது. முந்தைய அரசு விட்டுச் சென்ற சவால்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மோடி வந்த பிறகுதான் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது ஐமு கூட்டணி ஆட்சியில் பொருளாதாரம் மோசமடைந்தது: ஒன்றிய அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Union government ,NEW DELHI ,Parliament ,Dinakaran ,
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு