×

நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை மறு சீராய்வுக் கூட்டம் நடத்தி வருகிறது. இதில், வட்டி விகிதம் மாற்றம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நடப்பு மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சக்தி காந்ததாஸ் நேற்று அறிவித்தார்.

இதன்படி, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச அளவில் ஸ்திரமற்ற நிலை காணப்படுவதாலும், பண வீக்கத்தை 4 சதவீதத்துக்குள் நிலை நிறுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த 2022 மே மாதம் முதல் தொடர்ந்து 6 முறைகளில் ரெப்போ வட்டியை 2.5 சதவீதம் உயர்த்தியதன் மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரெப்போ வட்டி 6.5 சதவீதமாக உயர்ந்தது. அதன்பிறகு வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து 6வது முறையாக இதே நிலை நீடிக்கிறது.

நடப்பு 2024-25 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவும், பண வீக்கம் 4.5 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும் என்பதால், பண வீக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளன. 2023-24 நிதியாண்டில் பண வீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் பண வீக்கம் 5.69 சதவீதமாக இருந்தது. பே-டிஎம் பேமண்ட் வங்கி மீதான நடவடிக்கை குறித்துக் குறிப்பிட்ட சக்தி காந்ததாஸ், ‘‘விதிமுறைகளை கடைப்பிடிக்காததால்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கிய பிறகும் ஒரு நிறுவனம் விதிகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான நிறுவன ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என கவலைப்படத் தேவையில்லை’’ என்றார்.

* வட்டி, அபராத விவரங்கள் தெரிவிப்பது கட்டாயம்
தனிநபர்கள் மற்றும் குறுசிறு நடுத்தர தொழில்களுக்காக கடன் வழங்கும், வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை, கடன் வட்டி, செயல்முறை கட்டணம், தவணை செலுத்தாவிட்டால் விதிக்கப்படும் அபராதம், வட்டி மற்றும் இதர கட்டணங்களுடன் சேர்த்து கடனுக்கு வாடிக்கையாளர்கள் திருப்பிச் செலுத்தும் மொத்தத் தொகை, மொத்த தவணை, இன்சூரன்ஸ் கட்டணம், விண்ணப்பம் சமர்ப்பித்து எத்தனை நாட்களில் கடன் தொகை கிடைக்கும் உள்ளிட்ட விவரங்களை வங்கிகள் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

The post நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : RBI ,MUMBAI ,Dinakaran ,
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...