×

வாடிக்கையாளர்களுக்கு 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி சொந்தமாக மருந்துகளை தயாரித்து ‘ஸ்டோர் ஜெனரிக்’ முறையில் விற்பனை: மெட்பிளஸ் நிறுவனர் கங்காடி மதுகர் ரெட்டி தகவல்

டேராடூன்: மெட்பிளஸ் நிறுவனம் சொந்தமாக மருந்துகள் தயாரித்து ‘ஸ்டோர் ஜெனரிக்’ முறையில் வாடிக்கையாளர்களுக்கு 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய உள்ளதாக, மெட்பிளஸ் நிறுவனர் கங்காடி மதுகர் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மருந்து விற்பனை நிறுவனங்களின் முன்னணி நிறுவனமான மெட்பிளஸ் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் பிரபலமான ‘ஸ்டோர் ஜெனரிக்’ எனும் முறையை இந்தியாவில் மெட்பிளஸ் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் தனது தரமான சொந்த தயாரிப்பு மருந்துகளை தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் வழங்க இருக்கிறது. முதல் கட்டமாக, நாட்டில் உள்ள பிரபல மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து 700-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மருந்துகளை கொள்முதல் செய்ய மெட்பிளஸ் நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது. இதில் அதிகபட்சமாக 450 வகையான மருந்துகள் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அமைந்துள்ள ‘அகும்ஸ்’ மருந்து உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தயாரிக்கப்படுகின்றது.

இதையடுத்து ஹரித்துவாரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அகும்ஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தம் குறித்தும், தரமான மருந்துகள் தயாரிக்கும் முறைகள் குறித்தும் மெட்பிளஸ் நிறுவனத்தின் நிறுவனர் கங்காடி மதுகர் ரெட்டி அளித்த பேட்டி: மெட்பிளஸ் நிறுவனம் 2006ல் தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் வரவேற்பால் தற்போது நாடு முழுவதும் 4,200 கிளைகளுடன் இயங்கி வருகிறது. மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு இடைத்தரகர்களின்றி குறைந்த விலையில் நாங்கள் மருந்துகள் வழங்கி வருகிறோம். இதனால் தான் எங்கள் தயாரிப்பு மருந்துகள் தற்போது 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வழங்கி வருகிறோம்.
தற்போது செய்துள்ள ஒப்பந்தப்படி சொந்தமாக மருந்துகளை தயாரித்து ‘ஸ்டோர் ஜெனரிக்’ முறையில் விற்பனை செய்யவுள்ளோம்.

இதனால், மெட்பிளஸ் தயாரிப்பு மருந்துகளில் 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இந்த செயல்முறை மருந்து தொழில்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவரும். முதல்கட்டமாக நடப்பாண்டில் 700க்கும் மேற்பட்ட சொந்த தயாரிப்பு மருந்துகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இவை தினசரி வாழ்வில் வாடிக்கையாளர்களின் 70 சதவீத மருந்து தேவைகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்ப்பார்க்கிறோம். எங்கள் வணிக வர்த்தகத்தில் தமிழகத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 800 மெட்பிளஸ் மருந்தகங்கள் உள்ளன. சென்னையில் மட்டுமே 450 கடைகள் செயல்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்சம் 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிளில் மெட்பிளஸ் மருந்தகங்களை கொண்டு வருவதே எங்களுடைய இலக்கு. தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே எங்களது மருந்துகளை தமிழ் நாட்டில் இருந்து தயாரிக்க வாய்ப்புகளை எதிர்நோக்கியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post வாடிக்கையாளர்களுக்கு 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி சொந்தமாக மருந்துகளை தயாரித்து ‘ஸ்டோர் ஜெனரிக்’ முறையில் விற்பனை: மெட்பிளஸ் நிறுவனர் கங்காடி மதுகர் ரெட்டி தகவல் appeared first on Dinakaran.

Tags : Medplus ,Gangadi Madhukar Reddy ,Dehradun ,India ,Dinakaran ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...