×

ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: திமுக எம்.பிக்கள் கருஞ்சட்டை அணிந்து கோஷம், சித்தராமையாவை தொடர்ந்து பினராய் விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து தென் மாநிலங்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்றுமுன்தினம் டெல்லியில் போராட்டம் நடந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்களும், ஜந்தர் மந்தரில் கேரளா முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலும் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக நிதி ஒதுக்கீடு, வரி வருவாயில் பங்கீடு, திட்டங்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. குறிப்பாக வரி வருவாயில் பங்கு தருவதில் அதிக வரி வசூலிக்கும் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. தமிழ்நாடு அரசு வழங்கும் ஒரு ரூபாயில் நிதி பகிர்வாக 29 பைசாவை மட்டும்தான் ஒன்றிய அரசு திரும்ப அளிக்கிறது. இதேபோல் கர்நாடகாவுக்கு 15 காசும், தெலங்கானாவுக்கு 43 காசும், ஆந்திராவுக்கு 49 காசும், கேரளாவுக்கு 57 காசும் திருப்பி தரப்படுகிறது.

ஆனால், பாஜ ஆளும் மாநிலங்களில் இந்த விகிதம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. உ.பிக்கு அவர்கள் வசூலித்து தந்த ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசு ரூ.2.73 காசும், பீகாருக்கு ரூ..7.06 காசும் தருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை மெட்ரோ இரண்டாவது கட்டத் திட்டம் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 50 சதவீத நிதியை ஒன்றிய அரசு தரவேண்டும். இந்த திட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போது வரை அதற்கும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது.

அதேபோல் மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்கு கோரப்பட்ட ரூ.37,000 கோடி நிவாரண நிதியில் ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை. இந்த சூழலில் கடந்த 1ம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு வெள்ள பாதிப்பு, அதேபோன்று மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான உரிய நிதி ஒதுக்கீடு குறித்து இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எந்த ஒரு அறிவிப்பும் வௌியிடாமல் ஏமாற்றத்தை மட்டுமே ஒன்றிய அரசு தந்துள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசின் வஞ்சிக்கும் போக்கை கண்டித்து தென் மாநிலங்கள் டெல்லியில் போராட்டம் நடத்த துவங்கி உள்ளன. நேற்றுமுன்தினம் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் போராட்டம் நடந்தது.

இந்த நிலையில், உரிய நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்பிக்கள், மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து ‘‘கருஞ்சட்டை” கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழக அரசை வஞ்சிக்காதே, அரசியலமைப்பை நிலை நிறுத்து, அரசியலமைப்பை சீர்குலைக்காதே, ஜனநாயகத்தை நிலை நிறுத்துவோம் என கோஷங்கள் எழுப்பியும், அதுசார்ந்த பதாகைகளை கையில் ஏந்தியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. கேரளா முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கேரளா எம்பிக்கள், இடதுசாரி கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திமுக எம்பி திருச்சி சிவா பிருந்தா கரத், பிரகாஷ் கரத், தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கேரள முதல்வர் பினராய் விஜயன் பேசுகையில், ‘‘கேரளா அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஒன்றிய அரசால் பாதிக்கப்படும் அத்தனை மாநிலங்களும் இப்போது போல் ஒன்றாக இணைந்து போராடினால்தான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு விடிவு காலம் பிறக்கும். அனைத்து மாநிலங்களின் அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்குதான் இந்த போராட்டம். தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் என பாஜக ஆளாத மாநிலங்களில் கடுமையான மோதல் போக்கை ஒன்றிய அரசு கையாண்டு வருகிறது.

இதற்கெல்லாம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், வளர்ச்சி திட்டங்களுக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது, தங்களுக்கு ஆதரவான ஆளுநர்களை நியமனம் செய்து மக்களால் தேர்த்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இடையூறு செய்வது ஆகியவை எல்லாம், நீங்கள் நெருப்போடு விளையாடுகிறீர்கள் என்று தெரியாமல் செய்து வருகிறீர்கள். இவை அனைத்துக்கும் ஒன்றிய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என பேசினார்.

தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. அவர்கள் இல்லாத மாநிலங்களுக்கு போதிய நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. ஒன்றிய அரசுக்கு வருமானத்தை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாடு தொகையை பங்கீடு செய்கிறது. ஆனால் நாங்கள் உதவியாக தொகை கேட்கும் போது தர மறுக்கிறது. இது பாஜவின் வாடிக்கையாக உள்ளது. கூட்டாட்சிக்கு எதிராக வெட்கக்கேடான செயல்களை பாஜ செய்து வருகிறது.

குறிப்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பணமும் கொடுக்கமாட்டார்கள், கடன் வாங்க அனுமதிக்கமாட்டார்கள், அன்னிய நேரடி முதலீட்டிற்கும் முட்டு கட்டை போடுவார்கள், உலக வங்கி நிதியிலும் தலையிடுவார்கள் இப்படி செய்தால் கூட்டாட்சி எவ்வாறு நிலை நிறுத்தப்படும். குறிப்பாக அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கூட்டாட்சி தத்துவைத்தை குறித்து பேசியதோடு மட்டுமில்லாமல் மாநில உரிமைக்காக போராடினார். ஏன் எங்களின் எதிர்க்கட்சியாக இருந்த ஜெயலலிதா கூட அவ்வாறு தான் நடந்து கொண்டார். ஆனால் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது கூட்டாட்சி தத்துவம் குறித்து பேசிய நரேந்திர மோடி, பிரதமராக ஆனவுடன் அதனை மறுந்து செயல்படுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: திமுக எம்.பிக்கள் கருஞ்சட்டை அணிந்து கோஷம், சித்தராமையாவை தொடர்ந்து பினராய் விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Government ,DMK ,Pinarayi Vijayan ,Siddaramaiah ,New Delhi ,Karnataka ,Chief Minister ,MPs ,Jandar Mandar ,Dinakaran ,
× RELATED அரசு துறைகளையும் காவிமயமாக்குவதா?: தமிழச்சி தங்கப்பாண்டியன் கண்டனம்