×

தமிழ்நாட்டில் ஈரநில பறவைகள் குறித்த மதிப்பீடு!

சென்னை: வனத் துறையால் நடத்தப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள் / நீர்நிலைகள் / பறவைகள் சரணாலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மதிப்பீடு நடத்தப்பட்டது.

வனப்பகுதிகளில் 179, கிராமப்புறங்களில் 555 மற்றும் நகர்ப்புறங்களில் 170 என மொத்தம் 894 முனையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த ஆண்டு 389 இனங்களுடன் ஒருங்கிணைந்த மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த பறவைகளின் எண்ணிக்கை 6,80,028 ஆகும். அவற்றில் 120 இனங்கள் நீர்ப்பறவைகள், மீதமுள்ள 269 நிலப்பறவை இனங்கள் ஆகும்.

மொத்த பறவை எண்ணிக்கையான 6,80,028 இல் 79% நீர்ப்பறவைகள் (5,36,245) மற்றும் 21% நிலப்பறவைகள் (1,43,783) என மதிப்பிடப்பட்டுள்ளது. நீர் பறவைகள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. நீர்வாத்து: 69913
2. பூநாரை: 28822
3. முக்குளிப்பான்கள்: 6789
4. கடற்கரை பறவை: 19919
5. கடற்புறா, ஆலா வகைகள்: 173294
6. பெருங்கொக்குகள்: 17865
7. பாம்பு தாரா மற்றும் நீர்க் காகங்கள்: 54008
8. கூழைக்கடா, நாரை, கொக்குகள், அரிவாள்மூக்கன் மற்றும் கரண்டிவாயன் வகைகள்: 165635
மொத்தம்: 536245

6450 தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத் துறையைச் சேர்ந்த 3350 பணியாளர்கள் என மொத்தம் 9800 நபர்கள் இந்த மதிப்பீட்டில் பங்கேற்றனர்.

மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் மதிப்பீடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ்.ரா.ரெட்டியின் மேற்பார்வையிலும், ராகேஷ் குமார் டோக்ரா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்), முனைவர்.வீ.நாகநாதன். கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் (வன் உயிரினம்) மற்றும் அ.ஷர்மிலி, உதவி வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

The post தமிழ்நாட்டில் ஈரநில பறவைகள் குறித்த மதிப்பீடு! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu government ,Forest Department ,Tamil Nadu ,Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...