×

வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொகுதி 4ற்கான பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார் அமைச்சர் சி.வெ.கணேசன்

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் தொகுதி I, II, IV/ VAO, VII B, VIII, காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர், ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணிக்கான தேர்வு, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தன்னார்வ பயிலும் வட்டங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கு 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 30.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முறை நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்விற்காக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் 3,720 மாணவர்கள் கலந்து கொண்டதன் மூலம் 406 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணி புரிந்து வருகின்றனர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முதற்கட்டமாக சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொகுதி 4ற்கான பயிற்சி வகுப்பினை இன்று (08.02.2024) துவக்கி வைத்து விழா பேருரை ஆற்றினார்கள். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் எ.சுந்தரவல்லி திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள். இப்பயிற்சி வகுப்பில், 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி வகுப்புகள் வேலை நாட்களில் காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறும். இப்பயிற்சி வகுப்புகளில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இவ்வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் சுமார் 4000-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

போட்டித் தேர்விற்கு தயாராகும் அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் 29.11.2023 முதல் 12.01.2024 வரை நடத்தப்பட்ட கூட்டுறவு துறை உதவியாளர் பணிக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற 13 மாணவர்களுக்கு தனது பாராட்டினை தெரிவித்தார்கள்.

The post வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொகுதி 4ற்கான பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார் அமைச்சர் சி.வெ.கணேசன் appeared first on Dinakaran.

Tags : Minister ,C.V.Ganesan ,Employment ,Vocational Guidance Centre ,Chennai ,Tamil Nadu Government Staff Selection Board ,Teacher Selection Board ,Tamil Nadu Uniformed Staff Selection Board ,Department of Employment and Training ,C. V. Ganesan ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...