×

மிதுன ராசிக்கான கல்வியும் வேலைவாய்ப்பும்

முனைவர் செ.ராஜேஸ்வரி

என்ன சொல்லுது உங்க ராசி

மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த ராசி, காற்று ராசிகளில் ஒன்றாகும். மேலும், புதன் கிரகம் ஆகும். தொண்டை மற்றும் குரல்வளைக்குரிய கிரகம் ஆகும். மிதுன ராசிக்காரர்கள், குரல் சார்ந்த பணிகளை செய்வது பயனுள்ளதாக அமையும். சட்டம், மொழிப் பெயர்ப்பு, கணக்கு, வங்கித்துறையில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

மாணவப் பருவ சாதனைகள்

மிதுனராசி சிறுவர்கள், படிக்கும்போதே சிறந்த பேச்சாளர்களாகவும், கட்டுரை எழுதுகின்றவர்களாகவும், நாடகங்களில் நடிக்கின்றவராகவும் இருப்பர். திருக்குறள் ஒப்பித்தல், படம் வரைதல் போன்றவற்றில் தொடர்ந்து பரிசுகள் பெறுபவர். மிதுன ராசிக்காரர் பல மொழி கற்கும் திறன் படைத்தவர்.

கல்லூரிக் கல்வி

புதன் ராசிக்காரர்கள், கல்லூரியில் ஊடகவியல், பத்திரிகைத் துறை, நிகழ்த்து கலைகள், நுண்கலைகள் போன்ற படங்களை எடுத்துப் படிக்கலாம். பிகாம், முடித்துவிட்டு, பிஎல், ஆகியவற்றைப் படிக்கலாம்.

புதுமை விரும்பி

புதன் ஆதிபத்தியம் பெற்ற மிதுன ராசிக்காரர்கள், புதிது புதிதாக படிப்பதில் ஆர்வம் உடையவர்கள். சிறந்த பேச்சுத்திறன் உடையவர்கள். அழகாக கவர்ச்சியாகப் பேசித் தம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வர். நிகழ்த்து கலைகளில் நாடகம், நடிப்பு, பாட்டு போன்றவற்றில் இவர்கள் ஆண்டு விழாக்களில் கல்லூரி விழாக்களில் பங்கேற்றுப் பரிசுகளை அள்ளிச் செல்வதுண்டு.

படைப்பாளி

புதன் ராசிக்காரர்கள் சிறந்த படைப்பாற்றலும், எழுத்தாற்றலும் உடையவர்கள். இவர்கள் கதை, கவிதை எழுதுவதில் கெட்டிக்காரர்கள். செய்தியாளராக இருந்து, புதிய செய்திகளைச் சேகரித்து, செய்திக் கட்டுரைகளாக வெளியிடுவர். பத்திரிகையாளர் சந்திப்பில், அரசியல்வாதிகளிடம் சிக்கலான கேள்விகள் கேட்டு திண்டாட விடுவர். அவர்களிடமிருந்து பதிலை வரவழைப்பதில் கெட்டிக்காரராக இருப்பார்கள்.

கிரக சேர்க்கையும் தொழிலும்

மிதுன ராசிக்காரருக்கு, ஜாதகத்தில் புதன் சனி தொடர்பு இருந்தால், வக்கீல் தொழிலுக்கு வருவர். குறுக்கு விசாரணை செய்வதில் வல்லவர். செவ்வாய், புதன் சேர்க்கை இருப்பவர்கள், கடும் உழைப்பாளராக பல மொழி படித்து அல்லது பல ஊர்களுக்குச் சென்று பல மொழிகளில் தேர்ச்சி பெற்று, அங்கு பல்வேறு தொழிலில் ஈடுபடுவார்கள். புதன் சூரியன் சேர்க்கை உள்ளவர் தத்தம் நிபுணர்களாக இருப்பர். தலைமை பொறுப்புக்கு வருவர்.

இவர் அரசுப் பணிகளுக்குச் செல்லும் போது மிகப் பெரிய அதிகாரிகளின் பி.ஆர்.ஓ-வாக, தனிச் செயலராக திறமையுடன் செயல்படுவார். புதன், குரு சேர்க்கை இருக்கும்போது, பாரம்பரியக் கலைகளில் தேர்ச்சி பெறுவார். நல்ல கர்நாடக சங்கீத பாடகராகப் புகழ் பெறுவார். புதன், ராகு தொடர்பு இருந்தால், அவர் மேலைநாட்டு சங்கீதத்தில் கெட்டிக்காரராக இருப்பார்.

புதன், சுக்கிரன் இணைப்பு உள்ளவர்கள், நன்றாக வசனம் பேசும் சிறந்த நடிகராக விளங்குவர். வெள்ளித்திரை, சின்னத் திரைகளில் ஜொலிப்பர். மேடை நடிகராக விளங்குவார்கள். வசனம் பேசுவதில் திறமைசாலியாக இருப்பார்கள்.

அறிவின்படி நடப்பர்

மனசு, அறிவு என்ற இரண்டும் இரு பக்கமும் பிடித்து ஒருவரை இழுக்கும்போது, மிதுன ராசியினர் அறிவு காட்டிய வழியைத் தெரிவு செய்வார். இவர்கள் எதற்காகவும் மனம் கலங்குவதில்லை. இவர்கள் ஒரு பிரச்னையை இதயத்தை கொண்டு நோக்காமல் மூளையைக் கொண்டு ஆராய்வதால், இவர்கள் வாழ்க்கையில் கோபதாபங்களுக்கு இடம் இருக்காது. இவர்கள் முகத்தை வைத்து நாம் ஒரு கருத்தைக் கண்டறிய முடியாது. புதிய வாய்ப்புகள் வரும்போது அதனை இறங்கி எடுத்துச் செய்து வெற்றி அடைவது உறுதி.

வெற்றி தரும் தொழில்கள்

புதன் ராசிக்காரர்களுக்கு, செய்தியாளராக இருப்பது வெற்றி தரும். செய்தி ஆசிரியராக இருக்கலாம். ஆசிரியப் பணியில் திறம்பட செயல்படுவர். லெக்சர் கொடுப்பதில் கெட்டிக்காரர்கள். ஐடி நிறுவனத்திற்கு வேலைக்கு போனால், சாஃப்ட்வேர் டெவலப்பராக இருப்பார். புதிய புதிய மென்பொருள்களை கண்டுபிடிப்பதில் வல்லவர். நல்ல எழுத்துத் திறனும் பேச்சுத் திறனும் உடையவர். எழுத்தாளராப் புகழ் பெறுவார். பட்டிமன்றப் பேச்சாளர். மேடைப் பேச்சாளர், சொற்பொழிவாளர், பிரசங்கியார் என எல்லா வகையான மேடைப் பேச்சுகளிலும் வல்லவராக இருக்கக்கூடியவர்கள்.

விற்பனையாளர்

விற்பனைத் தொழிலில் ஈடுபடும் புதன் ராசிக்காரர், திறமையான சேல்ஸ் மேனேஜராக இருப்பார். விற்பனையில் அவருக்கு விதிக்கப்பட்ட இலக்கினை டார்கெட்டை கண்டிப்பாக அடைந்து விடுவார். கோபப்படாமல் நிதானமாக தன்னுடைய பொருளை விற்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, தேவையற்ற பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதில் கெட்டிக்காரர்.

வழக்கறிஞர்

வக்கீல் தொழில் இவர்களுக்கு மிகவும் ஏற்ற தொழில் ஜாதகத்தில் அதற்குரிய வாய்ப்புகள் அமையும் போது மிகச்சிறந்த வக்கீலாக புதன் ராசிக்காரர்கள் வர வாய்ப்புண்டு.

சுற்றுலா

மிதுன ராசிக்காரருக்கு ஏற்ற இன்னொரு சிறப்பான துறை சுற்றுலா. சுற்றுலா வழிகாட்டியாக இருப்பார். டிராவல் பிளாக்கர் (blogger), சுற்றுலா பற்றிய வலை பூ (blog) உருவாக்கி பல்வேறு சுற்றுலா தலங்களைப் பற்றி எழுதிக் கொண்டே இருப்பார். படங்களையும் வெளியிட்டு வருவது ஏற்ற தொழிலாக அமையும். சுற்றுலா செல்பவர்களுக்கு பயணச்சீட்டு எடுத்துக் கொடுப்பது அவர்களுக்கான குறிப்புகளை திரட்டிக் கையேடாக வழங்குவது போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்.

வசனகர்த்தா/ டப்பிங் பேசுவோர்

திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் மற்றும் நாடகங்களுக்கு வசனம் எழுதுவதில் கெட்டிக்காரராக இருப்பார்கள். சிலர் பின்குரல் (டப்பிங்) கலைஞர்களாக விளங்குவர். சிலர் அரசியல்வாதி, தொழிலதிபர், முதலாளி போன்றோருக்கு மேடை பேச்சு, நூல் அணிந்துரை, வாழ்த்துரை எழுதி கொடுக்கும் தொழிலில் இருப்பார்கள்.

கன்டென்ட் ரைட்டர்

மிதுன ராசிக்காரர், சிறந்த கன்டென்ட் ரைட்டர் ஆக இருப்பார். நவீன காலத்தில் எடிட்டர், காப்பி ரைட்டர், இன்டர்பிரட்டர் போன்ற தொழில்கள் இவருக்கு ஏற்ற தொழில்களாகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இவர் சிறந்து விளங்குவார். ஈவன்ட் மேனேஜர் தொழில்கூட சிலருக்கு பொருந்தி வரும். மொத்தத்தில் எழுத்திலும், பேச்சிலும் கெட்டிக்காரர்கள்.

The post மிதுன ராசிக்கான கல்வியும் வேலைவாய்ப்பும் appeared first on Dinakaran.

Tags : Gemini ,Dr. ,S. Rajeshwari ,Mercury ,
× RELATED மிதுனம்