×

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன் : மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனைத்து எம்பிக்களுக்கும் முன் உதாரணமாக திகழ்வதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் எம்.பிக்களுக்கு பிரியாவிடை அளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி பேசும் போது,”இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சபையில் இதுபோன்ற சம்பவம் நிகழ்கிறது. ஆனால் இந்த சபை தொடர்ச்சியின் சின்னமாக உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை புதிய தோற்றத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்த மாநிலங்களவை ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் ஒரு புதிய உயிர் மற்றும் ஆற்றலைப் பெறுகிறது.மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்கள் இந்த நாட்டின் சொத்து.

நான் குறிப்பாக டாக்டர் மன்மோகன் சிங் ஜியை நினைவுகூர விரும்புகிறேன்.6 முறை அவர் ஒரு தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் தனது மதிப்புமிக்க சிந்தனைகளால் இந்த சபைக்கு பங்களிப்பை ஆற்றியுள்ளார். அனைத்து எம்.பிக்களுக்கும் முன்னுதாரணமாக மன்மோகன் சிங் திகழ்கிறார். முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்க வீல் சேரில் வந்து தனது கடமையை மன்மோகன் சிங் ஆற்றினார். ஓய்வு பெற இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன். கோவிட் -ன் கடினமான காலகட்டத்தில், நாம் அனைவரும் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொண்டோம். நாட்டின் பணிகளை நிறுத்த எந்த கட்சி எம்.பி.யும் அனுமதிக்கவில்லை. கொரோனா காலத்தில் அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு உறுதுணையாக நின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக, நாடு செழிப்பின் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன் : மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,Modi ,Delhi ,President of the Republic ,
× RELATED மக்கள் நல திட்டங்களை...