சென்னை: பீரங்கிகளில் பயன்படும் ஸ்மார்ட் வெடி குண்டுகளை கமியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் வடிவமைக்க உள்ளனர். தற்போதுள்ள 155 மிமீ பீரங்கி வெடிமருந்துகளைவிட 50 மடங்கு துல்லியத்துடன் இந்திய ஸ்மார்ட் வெடிமருந்துகளை மேம்பட்ட வரம்புகளுடன் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட், ராணுவம், கடற்படை, விமானப்படை, துணை ராணுவப் படை ஆகியவற்றின் வீரர்களுக்குத் தேவைப்படும் வெவ்வேறு விதமான வெடிமருந்துகள், வெடிபொருட்களைத் தயாரித்து வருகிறது. மேலும் தயாரிப்பு, ஆராய்ச்சி சோதனை, மேம்பாடு, தொழில்நுட்பம், வணிகப்படுத்துதல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.
பீரங்கிகள், பெரிய ரக துப்பாக்கிகள், தெறோச்சி என அழைக்கப்படும் நகரும் துப்பாக்கிகளில் 155 மிமீ கொண்ட வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. உலகப்போர் காலக்கட்டத்தில் இருந்து 2000ம் காலக்கட்டம் வரை மனிதர்கள் மூலம் இலக்குகளை குறி வைத்து தாக்கும் பீரங்கிகள் பயன்பாட்டில் இருந்தது. மனிதர்கள் மூலம் இலக்குகளை குறி வைக்கும் 155 மிமீ வெடி மருந்துகளின் துல்லியம் 500 மீட்டர் என இருக்கிறது. அதாவது தற்போது 8 கிமீ முதல் 38 கிமீ தூரத்தில் இருந்து பீரங்கி மூலம் இலக்குகள் மீது குறி வைத்தாலும் அவை 500 மீட்டர் பிழையோடு தாக்கும்.
இதைக் குறைப்பதற்காக எலக்ட்ரானிக் ஸ்மார்ட் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த வகை ஸ்மார்ட் வெடி மருந்துகள் இருக்கிறது. அதாவது தூரத்தில் இருந்து ஒரு இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தும் போது அது சரியான இலக்கை சென்றடைவதற்கான டிஜிட்டல் சிக்னல்களை பயன்படுத்துவது தான் ஸ்மார்ட் வெடிகுண்டுகள். 155 மிமீ வெடிமருந்துகளின் துல்லியத்தை 500 மீட்டரிலிருந்து 10 மீட்டருக்குள் கொண்டுவருவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
The post இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாராகும் ஸ்மார்ட் வெடிகுண்டு: சென்னை ஐஐடி உருவாக்க உள்ளது appeared first on Dinakaran.