×

ஸ்பெயின் நாட்டு பயணம் வெற்றிபோல் தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஸ்பெயின் நாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்தது போல் தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: மேகங்களின் மீது மிதப்பது போன்ற உணர்வுடன், வானில் பறக்கின்ற விமானத்திலிருந்து இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். ஸ்பெயின் நாட்டுப் பயணத்தை நிறைவு செய்து, நெஞ்சத்தில் தேங்கியிருக்கும் நினைவுகளுடன் தமிழ்நாட்டுக்குத் திரும்பும் நிலையில், தரையிறங்குவதற்கு முன்பாக என் இதயத்தில் உள்ளவற்றை அன்பு உடன்பிறப்புகளான உங்களிடம், உங்களில் ஒருவனான நான் இறக்கி வைத்துவிட வேண்டும் என்ற பேரன்பின் வெளிப்பாடே இந்த மடல்.

4 கோடியே 75 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின். ஆண்டுக்கு 9 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயினுக்கு வருகிறார்கள். அங்கு இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை முதியோர் அளவிற்கு இல்லை. பழமைப் பாரம்பரியம் மிக்க டொலிடோ நகரத்திற்குள் நுழையும்போது ஓர் அரங்கம் கண்ணில் பட்டது. நம் ஊரில் ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதல் போட்டி போன்ற, ஸ்பெயினின் புகழ்மிக்க எருது விளையாட்டுப் போட்டிக்கான அரங்கம் அது. ஸ்பெயின் நாட்டின் பழம்பெருமைமிக்க அரங்கங்கள் போல, நம் தமிழ்ப் பண்பாட்டு விளையாட்டின் பெருமையைக் காத்திட மாமதுரையில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஏறுதழுவுதல் அரங்கமும் அதனைத் திறந்து வைத்த நிகழ்வும் மனதில் நிழலாடி, நிறைவைத் தந்தன.

தென் அமெரிக்க நாடுகள் பலவற்றிற்கு ஸ்பெயின் நாட்டவர் கடல்வழியாகச் சென்றதுடன் அங்கு குடியேறிய காரணத்தால், அந்த நாடுகளில் ஸ்பானிஷ் மொழி இன்று அலுவல் மொழியாக இருக்கிறது. அது ஸ்பெயின் நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிறது என்பதை இந்தப் பயணத்தில் உணர்ந்து கொண்டேன். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தருணம் நெருங்கி வருவதால் அது குறித்துக் காணொலி வாயிலாக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனைகளை மேற்கொண்டேன். திமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து உரையாடினேன். திமுகவினரின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அழைத்து அண்ணா அறிவாலயத்தில் விரிவான ஆலோசனை நடத்தி, கள நிலவரத்தை எடுத்துரைத்து, வெற்றிக்கான வியூகத்தை வகுத்துத் தந்திருக்கிறது.

தனிப்பட்ட என்னுடைய, உங்களுடைய மகிழ்ச்சியைவிட, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தகர்த்து நாட்டைக் காப்பாற்றும் போது ஏற்படும் மகிழ்ச்சியே முதன்மையானது. ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுபோல, தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும். தமிழ்நாடு வளம் காணும். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும். அதற்கான களம் நம்மை அழைக்கிறது. ஆயத்தமாவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தனிப்பட்ட என்னுடைய, உங்களுடைய மகிழ்ச்சியைவிட, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தகர்த்து நாட்டைக் காப்பாற்றும் போது ஏற்படும் மகிழ்ச்சியே முதன்மையானது.

The post ஸ்பெயின் நாட்டு பயணம் வெற்றிபோல் தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Spain ,India ,Chief Minister ,M.K.Stal ,DMK ,Chennai ,M.K.Stalin ,President ,M. K. Stalin ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...