×

இதுவரை எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை 14 எம்.பி. சீட், 1 ராஜ்யசபா சீட் தருபவர்களுடன் மட்டுமே கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: இதுவரை எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், 14 நாடாளுமன்ற தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தருபவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவர் தலைமையில் நடைப்பெற்றது.

அவை தலைவர் இளங்கோவன், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் மற்றும் வி.சி.ஆனந்தன், அனகை முருகேசன் உட்பட 82 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து பேசினர். பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியை விரும்புவதாக பலர் தெரிவித்துள்ளனர். தனித்து போட்டியிடலாம் என்றும் சிலர் பேசியுள்ளனர்.

கூட்டத்தை தொடர்ந்து, பிரேமலதாகூறியதாவது: வள்ளல் விஜயகாந்த் நினைவு அறக்கட்டளை மூலமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வரும் அனைவருக்கும் தொடர்ந்து அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விஜயகாந்த் மறைவின் போது, தமிழக அரசு மரியாதை அளித்து கவுரவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எங்கள் கட்சியின் வளர்ச்சி, நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பெரும்பாலான மாவட்ட செயலாளர்களின் கருத்து தேமுதிக வரும் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும் என்பது தான். காரணம் அந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் தற்போது தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தற்போது தேமுதிகவின் முன்பு 4 வாய்ப்புகள் உள்ளன. அதில் ஒன்று தனித்துப் போட்டி. மீதமுள்ள மூன்று, திமுக, அதிமுக, பாஜ என ஏதேனும் ஒரு கூட்டணியில், எந்த கட்சி அதிகபட்ச தொகுதியை ஒதுக்கி தருகிறார்களோ அந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பது தான் மாவட்ட செயலாளர்களின் கருத்தாக உள்ளது. தனித்துப் போட்டி, அப்படி இல்லை என்றால் யார் அதிக தொகுதி வழங்குகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைப்போம்.

இதுவரை யாரிடமும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தல் யூகங்களுக்கு தொண்டர்கள் யாரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். குழு அமைத்தே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதியை வெளிப்படையாக இறுதி செய்வோம். 14 நாடாளுமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் யார் தருகிறார்களோ அவர்களுடனே கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது யார் கொள்கை அடிப்படையில் கூட்டணி வைக்கிறார்கள், யார் சீட் அதிகமாக தரும் இடங்களில் தானே கூட்டணிகள் அமைக்கின்றனர். தேமுதிகவிற்கு என கொள்கை, சித்தாந்தம், சமூக நீதி என அனைத்தும் உள்ளது. நடிகர் விஜய் கட்சியை ஆரம்பித்து உள்ள நிலையில் விஜய்க்கு தேமுதிக சார்பில் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post இதுவரை எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை 14 எம்.பி. சீட், 1 ராஜ்யசபா சீட் தருபவர்களுடன் மட்டுமே கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,Premalatha Vijayakanth ,CHENNAI ,Rajya Sabha seat ,DMD ,Coimbatore, Chennai ,14 M.P. Alliance ,Dinakaran ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...