×

தாட்கோ மூலம் 2023-24ம் ஆண்டில் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் ரூ.104 கோடி வரை நிதியுதவி: எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.2.50 கோடி கல்வி கடன்; அதிகாரிகள் தகவல்

சென்னை: சமூக நீதி, சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம் உள்ளிட்ட மானுட நெறிகளின்படி தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். அந்தவகையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அரசின் திட்டங்கள் என்பது கடைக்கோடி மக்களின் நலன் சார்ந்தவையாக தீட்டப்படுகின்றன. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொதுப்பிரினர் அளவிற்கு மேம்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களையும் அரசு அறிவித்து அதற்கான நிதியுதவிகளை வழங்கி வருகின்றது. இதில், தாட்கோ எனப்படும் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பல்வேறு நல திட்டங்கள் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்த கழகத்தின் நடவடிக்கையாக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துதல், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. இதில், பொருளாதார மேம்பாட்டு திட்டம் மூலம் மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவி, வங்கிகள் மற்றும் தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டு கழகம், தேசிய பழங்குடியினர் நிதி மேம்பாட்டு கழகம் மற்றும் தேதிய துப்புரவு பணியாளர்கள் நிதி மேம்பாட்டு கழகங்களிலிருந்து பெறப்பட்ட நிதி ஆதாரங்கள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், விவசாயம், சிறு தொழில், வணிகம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் தொழில் புரிந்துவரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு 30 சதவீதமும், பழங்குடியினருக்கு 50 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், கடந்த 2022-23ல் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு இத்திட்டம் மூலம் ரூ.171 கோடி வரை நிதியுதவி வழங்கப்பட்டது. இதில் 19,042 ஆதிதிராவிட மக்களுக்கும், 1,502 பழங்குடியின மக்களுக்கு கடனுதவி அளிக்கப்பட்டது. அதன்படி, இந்த நிதியாண்டிற்கான மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.103.66 கோடி வரை நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தாட்கோ உயர் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சட்டப்பேரவை கூட்டதொடரில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளையோரின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் நவீன காலத்திற்கு ஏற்ப திருத்தி அமைக்கப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து திட்டத்தையும் ஒருங்கிணைத்து ‘‘முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம்’’ என்ற பெயரில் புதிய திட்டமாக தற்போது செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக, இந்த திட்டத்தின் கீழ் 18 முதல் 55 வயது வரை உள்ள தனிநபர் மற்றும் குழுக்கள் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள, பல வருவாய் ஈட்டும் தொழில்களுக்கு வங்கிகள் மூலம் உதவும் வகையில் மானிய கடனை வழங்கி வருகிறோம்.

* விவசாயம் தொடர்பான வாகனங்கள் வாங்குதல்.
* இலகுரக, கனரக வாகனங்கள் வாங்குதல்.
* பால் பண்ணை மற்றும் கோழி பண்ணை அமைத்தல்.
* பல்பொருள், அங்காடி, எழுது பொருள் விற்பனை, உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், தையல் பயிற்சி நிலையம் அமைத்தல், மின்சாதன பொருட்கள் விற்பனை நிலையம், உணவகம், வாகன உதிரி பாகங்கள் விற்பனை, ஜவுளி கடை அமைத்தல் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்தல்.

இதுபோன்ற புதிய தொழில்களை மேற்கொள்ள மானியம் அளிக்கிறோம். இதுமட்டுமின்றி, இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானியம், நிலம் வாங்கும் திட்டம் மற்றும் நில மேம்பாட்டு திட்டம், விவசாயிகளுக்கான மின் இணைப்பு பெற மானிய உதவி திட்டம், ஆவின் பாலகம், கறவை மாடுகள் வாங்க, சிமென்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம், துப்புரவு பணியாளர்களுக்கான நிதி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மேலும், கடந்தாண்டை காட்டிலும், இந்த நிதியாண்டு முடிவதற்குள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அதிகப்படியான கடன் தொகையை பயனாளிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். அதேபோல எஸ்சி, எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி கடன் ரூ.2.50 கோடி வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கல்விக்கடன்
அளிக்கப்பட்ட விவரம்
படிப்புகள் பயனாளிகள் தொகை
எம்.பி.பி.எஸ் 24 பேர் ரூ.60,86,216
எம்.டி 22 பேர் ரூ.84,77,756
இன்ஜினியரிங் 22 பேர் ரூ.31,19,445
பார்மசிஸ்ட் 10 பேர் ரூ.26,49,200
ஆர்ட்ஸ்&சைன்ஸ் 56 பேர் ரூ.49,93,075
மொத்தம் 134 பேர் ரூ.2,53,25,692

அதிகளவில் மேம்பாட்டு நிதி அளிக்கப்பட்ட
டாப் 5 மாவட்டங்கள்
மாவட்டங்கள் பயனாளிகள் வழங்கப்பட்ட
தொகை
திருவண்ணாமலை 899 பேர் ரூ.7.56 கோடி
திருவள்ளூர் 417 பேர் ரூ.6.37 கோடி
மதுரை 599 பேர் ரூ.6.35 கோடி
திருவாரூர் 267 பேர் ரூ.4.22 கோடி
திருச்சி 203 பேர் ரூ.3.99 கோடி

* 8,000 பேர் பயன்
இந்தாண்டிற்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் அளிக்கப்பட்ட நிதியுதவியின் அடிப்படையில் 7,221 ஆதிதிராவிடர் மற்றும் 713 பழங்குடியின மக்கள் பயனடைந்துள்ளனர்.

தொழில் முனைவோர்களுக்கான திட்ட விவரம்
* பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான திட்ட தொகையில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படுகிறது. இதிலும் 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
* ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்களுக்கு திட்ட தொகையில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் 6% வட்டி மானியம் தாட்கோ மூலமாக வழங்கப்படுகிறது.

The post தாட்கோ மூலம் 2023-24ம் ஆண்டில் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் ரூ.104 கோடி வரை நிதியுதவி: எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.2.50 கோடி கல்வி கடன்; அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : TADCO ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Kadakodi ,SC ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...