×

5ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு

சென்னை: வேலை நிறுத்தம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நேற்று 5ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் 5ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. தொழிலாளர் தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் இதர போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் மற்றும் 27 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது சில போக்குவரத்து கழகங்களில் பழிவாங்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழிற்சங்கங்த்தினர் தெரிவித்தனர். அந்த நடவடிக்கைகள் திரும்ப பெறப்படும் என உறுதியளிக்கப்பட்டது. போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் வரவு செலவு வித்தியாசத் தொகை அரசு நிதி ஒதுக்குவது தொடர்பாக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு வாரிசுதாரர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 2023 செப்.1ம் தேதி முதல் நிலுவை தொகை வழங்க வேண்டும் என ஏஐடியுசி தலைவர் ஆறுமுகம் கோரிக்கை விடுத்தார். இது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பிப்.21ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 5ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Tripartite Negotiations Committee ,CHENNAI ,Managing ,Metropolitan Transport Corporation ,Tripartite Negotiations 15th Wage ,Negotiation Committee ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு...