×

ஏழை, நடுத்தர மக்களுக்கு வெறும் நாமம்தான் கிடைத்தது இடைக்கால பட்ஜெட் வெறும் வாயில் சுட்ட வடை: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி காட்டம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் வெறும் வாயில் சுட்ட வடை என்று மக்களவையில் நடந்த விவாதத்தில் தயாநிதி மாறன் எம்.பி விமர்சித்தார். ஒன்றிய இடைக்கால பட்ஜெட் மீது மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியதாவது: இந்த இடைக்கால பட்ஜெட் ஒரு பெரிய கண் துடைப்பு, ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது, குறிப்பாக ஏழை மக்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை எந்தப் பயனையும் அளிக்கவில்லை. வரிச்சலுகை எதிர்பார்த்த நடுத்தர மக்களுக்கு வெறும் நாமம்தான் கிடைத்தது.

சமூக நலத்திட்டங்களுக்கு 7 சதவீதம் மானியத்தை இந்த ஒன்றிய அரசு குறைத்துள்ளது. குறிப்பாக உணவு மானியம் 3.3 சதவீதம் குறைத்திருக்கிறார்கள். பிறகு விவசாயத்திற்கான உரம் மானியத்திலும் 13.2 சதவீதம் இந்த நிதிநிலை அறிக்கையில் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாது சமூக பாதுகாப்புகான திட்டங்களிலும் இவர்கள் நிதி மானியத்தை குறைத்துள்ளார்கள்.
இந்த நிதிநிலை அறிக்கையை வாசித்த நிதி அமைச்சர் வாயில் இருந்து வருவதெல்லாம் உண்மைக்கு மாறானவைதான். குறிப்பாக இந்த நிதிநிலை அறிக்கை ஏழைகளுக்காக, இளைஞர்களுக்காக, மகளிருக்காக, விவசாயிகளுக்காக என்று சொன்னார்கள், ஆனால் உண்மை நிலை என்ன என்றால், இங்கு அம்பானி, அதானி, டாடா போன்ற பணம் படைத்தவர்கள் மேலும் பணக்காரராகும் வகையில்தான் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

அதாவது மேற்குறிப்பிட்ட அம்பானி, அதானி, டாடா போன்ற 20 சதவீதம் பணக்காரர்களிடம்தான் இந்தியாவின் 40 சதவீதம் வருமானம் உள்ளது. ஆனால் நடுத்தர மக்கள் மேலும் ஏழை ஆகி வருகின்றனர். அவர்களது வருமானம் 20 சதவீதம் குறைந்துள்ளது. சிலருக்கு வருமானமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக அரசு வந்த நாள் முதல் தமிழ்நாட்டிற்கு எதிரான அரசாகவே செயல்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு மிகப் பெரிய புயலான மிக்ஜாம் புயலை தமிழ்நாடு, குறிப்பாக சென்னை மாவட்டம் சந்தித்தது. ஆனால் ஒன்றிய அரசிடமிருந்து எங்களுக்கு ஒரு நயா பைசா கூட நிவாரணம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின், ‘நாங்கள் உங்கள் பணத்தையோ, உங்கள் அப்பன் வீட்டு பணத்தையோ கேட்கவில்லை, எங்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுங்கள்’ என்றுதான் கேட்டார். அதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் ஒரு மணி நேரமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார். உங்கள் அப்பன் வீட்டு காசு, உங்க ஆத்தா வீட்டு காசு என்றெல்லாம் கேட்கக் கூடாது எனக் கூறுகிறார். அதுவே பிரதமர் மோடி , முன்பொரு நாள், உங்கள் சாச்சா வீட்டு காசா என்று கேட்டார். அப்போது நிதியமைச்சருக்கு அறிவுரை சொல்ல நேரமில்லையா? அதுவே நான் திருப்பி உங்கள் தோப்பனார் வீட்டு காசா என்று கேட்டால் நன்றாக இருக்குமா? நிதியமைச்சரின் பேச்சில் வன்மம் இருக்கிறது.

எனவே இந்த பேச்சை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ரயில்வேத் துறையின் மூலம் எங்கள் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் வந்து சேரவில்லை. குறிப்பாக நான் சார்ந்த மத்திய சென்னை தொகுதியில் உள்ள யானைக்கவுனி மேம்பாலம் சீரமைப்பு பணிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த பணியும் நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது. எந்த அடிப்படை கட்டமைப்பும் இல்லாத மதுரை எய்ம்சில் மாணவர்கள் படிக்கிறார்கள். இது இந்திய சட்டப்படி குற்றம் என கூறுகிறது. இதற்காக யார் மீது சி.பி.ஐ வழக்கு பதியும்? சுகாதாரத்துறை அமைச்சர் மீதா அல்லது பிரதமர் மீதா? யார்மீது இப்போது சி.பி.ஐ. வழக்கு பதியும். உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்டினி என்னும் வகையில் தமிழ்நாட்டை வஞ்சித்து புறக்கணிக்காதீர்கள்.

தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசிற்கு வரியாக 1 ரூபாய் கொடுத்தால் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு திருப்பி வெறும் 29பைசா தான் தருகிறது. ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்திற்கோ அவர்கள் கொடுக்கும் 1 ரூபாய் வரிக்கும் ஒன்றிய அரசு திருப்பித் தரும் தொகை ரூ. 2.73 பீகாருக்கு ரூ. 7.6 நாங்கள் கேட்பது எல்லாம், இந்தியா ஒட்டுமொத்தமாக வளரவேண்டும் என்றும், இவ்வாறு தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிக்காதீர்கள் என்றும், எங்கள் தமிழ் மொழியையும் வளர்க்க நடவடிக்கை எடுங்கள் என்றுதான்.
இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

The post ஏழை, நடுத்தர மக்களுக்கு வெறும் நாமம்தான் கிடைத்தது இடைக்கால பட்ஜெட் வெறும் வாயில் சுட்ட வடை: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Malakawake Thayanidi Maran M. P ,New Delhi ,EU government ,People's Assembly ,Union Government ,Central Chennai ,Dayaniti Maran M. P Katham ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...