×

ஊட்டியில் பங்களா கட்டுமான பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு 6 பெண் தொழிலாளர்கள் பலி: கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

ஊட்டி: ஊட்டியில் பங்களா கட்டுமான பணிகளின்போது மண் சரிவு ஏற்பட்டு 6 பெண் தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் ஜேக்கப் பிரிட்ஜோ என்பவரின் நிலத்தில் பங்களா கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இந்த கட்டிடம் மற்றும் கட்டிடத்தை சுற்றிலும் பிரமாண்ட தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு வருகிறது.

நேற்று கட்டிடத்தின் பின்புறம் உள்ள 50 அடி உயரத்தில் பழுதடைந்த பொதுக்கழிப்பிடத்தை ஒட்டி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்தது. மதியம் 12 மணியளவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தேநீர் அருந்துவதற்காக அங்கு அமர்ந்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பழைய கழிப்பிடம் இடிந்து விழுந்து, பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அப்போது, அங்கு அமர்ந்திருந்த 7 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண் சரிவுக்குள் சிக்கி புதைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு மண்ணில் புதையுண்ட 3 பேரை மீட்டனர். மற்றவர்களையும் மீட்க போராடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மண் சரிவை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மண்ணில் புதையுண்ட மேல்காந்தி நகர் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (40), ஷகிலா (30), சங்கீதா (38), மேல் தலையாட்டுமந்து பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (40), உமா (35), ராதா (38) ஆகியோர் மீட்கப்பட்டு, உடனடியாக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், 6 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் மண் சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தலையாட்டு பகுதியை சேர்ந்த சாந்தி (54), ஜெயந்தி (56), தாமஸ் (24), மகேஷ் (23) ஆகியோர் ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து நடந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள் மீது காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று மாலை ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பாக ஊட்டி லவ்டேல் போலீசார் உரிமையாளர் பிரிட்ஜோ, காண்ட்ராக்டர் பிரகாஷ், சூபர்வைசர்கள் ஜாகீர் அகமது, ஆனந்தராஜ் ஆகியோர் மீது 288-கட்டிடங்கள் கட்டுமான பணியின்போது அஜாக்ரதையாக இருத்தல், 336-மற்றவர்களின் உயிர் பாதுகாப்பிற்கு அபாயம் உண்டாக்குதல், 337-மற்றவர்களுக்கு காயம் விளைவித்தல், 304/2-கொலை குற்றமல்லாத மரணம் விளைவித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 6 பேர் பலிக்கு காரணமான கட்டிடத்திற்கு நேற்று நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

* 6 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஊட்டியில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நான்கு பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுவன்
மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்த ஷகிலாவின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். 8 வயது சிறுவன் ஷகிலா வசித்து வந்தார். தற்போது ஷகிலாவும் உயிரிழந்ததால் தாய், தந்தை இல்லாமல் யாருமின்றி அந்த சிறுவன் தவிப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* தொடரும் உயிரிழப்புகள்
நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மாஸ்டர் பிளான் சட்டம் உள்ளது. இதனை மீறி சிலர் பிரமாண்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்போது மண் சரிவு ஏற்பட்டு விபத்து நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஊட்டி அருகே தீட்டுக்கல் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் பெர்ன்ஹில் பகுதியில் 2 பேரும், மிஷ்னரி ஹில் பகுதியில் ஒரு பெண்ணும் உயிரிழந்தார். எனவே ஆபத்தான பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும், விதிமுறைகள் மீறி கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

* விதிமுறை மீறி கட்டிடங்கள்
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான கட்டிடங்கள் மலை சரிவுகளிலும், பள்ளத்தாக்குகளிலும் கட்டப்படுகின்றன. இதனால் கலெக்டர் தலைமையிலான குழு முழுமையாக ஆய்வு செய்த பின்னரே கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் சிலர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் பெரிய கட்டிடங்களை கட்டுகின்றனர். மேலும் சிலர் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பெரிய அளவிலான தடுப்புச்சுவர்கள் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அதுவே விபத்துகளுக்கு காரணமாகிவிடுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post ஊட்டியில் பங்களா கட்டுமான பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு 6 பெண் தொழிலாளர்கள் பலி: கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Jacob ,Gandhinagar ,Ooty, Nilgiri district ,Dinakaran ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்