×

10 நாள் ஸ்பெயின் பயணம் முடிந்து திரும்பினார் ரூ.3440 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: ஸ்பெயின் நாட்டில் 10 நாள் சுற்றுப்பயணம் முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார். அப்போது, ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ரூ.3,440 கோடி முதலீடுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசு முறை பயணமாக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 27ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டு 28ம் தேதி தலைநகர் மாட்ரிட் சென்றடைந்தார். அங்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த ஜனவரி 27ம் தேதி சென்றேன். முதல் நிகழ்வாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் முதலீட்டாளர் மாநாடு நடந்தது. அதற்கு ஸ்பெயின் நாட்டின் பல்வேறு தொழில்துறை குழும நிர்வாகிகள் எல்லாம் வந்திருந்தார்கள். பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள்,ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்தேன். தமிழ்நாட்டில், தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழல் பற்றி எடுத்துச் சொல்லி, நம்முடைய மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தினேன். அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாட்களில் அங்குள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன். தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். சில முக்கிய நிறுவனங்களின் பெயர்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

1. காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் மறுசுழற்சியிலும் முன்னணி நிறுவனமான ஆக்சியானா நிறுவனம்
2. உயர்தர வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியிலும், பீங்கான் பொருட்கள் உற்பத்தியிலும் உலகின் முன்னணி நிறுவனமான ரோக்கா நிறுவனம்
3. கன்டெய்னர் முனையங்கள் மற்றும் சரக்கு பூங்காக்களை அமைப்பதில் சிறந்த நிறுவனமான ஹபக்-லாய்டு நிறுவனம்
4. சர்வதேசத் தரத்தில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை அமைக்கக்கூடிய அபர்ட்டிஸ் நிறுவனம்
5. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கின்ற கெஸ்டாம்ப் நிறுவனம்
6. ரயில்வே சார்ந்த உற்பத்தி தொழிலில் உயர் தொழில்நுட்பத்துடன் செயல்படக்கூடிய டால்கோ நிறுவனம்
7. பொறியியல் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கல்வித் திறன் பயிற்சிக்கான நவீன கருவிகளை உற்பத்தி செய்கின்ற எடிபான் நிறுவனம்
8. உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான மேப்ட்ரீ நிறுவனம்
– ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் தங்களுடைய தொழில் திட்டங்களையும் விளக்கியும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தங்களின் ஆர்வத்தையும் தெரிவித்தார்கள்.
இந்த முயற்சிகளின் பயனாக, ரூ.3,440 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

1. ஹபக் லாய்டு நிறுவனம் – ரூ.2500 கோடி முதலீடு.
2. எடிபான் நிறுவனம் – ரூ.540 கோடி முதலீடு.
3. ரோக்கா நிறுவனமும்- ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்திருக்கிறது. மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து எதிர்காலத்தில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.
உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக, இந்தியா கருதப்பட்டு வரும் இந்த வேளையில், அந்த உற்பத்தித் துறையில் முந்திச் செயல்படுகின்ற மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வருவதையும், பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகள் பல தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்தியா பயணிக்கக் கூடிய பாதையில், முந்தி பயணிப்பது மட்டுமல்ல, தமிழ்நாடு தனக்கென்று தனிப்பாதை ஒன்றை வகுத்துச் செயல்பட்டு வருவதாகவும், முதல் பக்கத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறது, அதை பாராட்டியும் இருக்கிறது. இது போன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கிறது. தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தும் எங்கள் பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிகமிக பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இது போன்ற அடுத்தடுத்த பயணங்கள் திட்டமிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

* நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு: தற்போது நீங்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு வரும்போது முதலீடுகள் அதிகளவு ஈர்க்கப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வேறு நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா? திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிவிட்டு செய்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நெருங்கி வருவதால், அதற்குப் பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும். நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியிருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக, அந்த நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் பார்த்தீர்களா?

பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். ஏனென்றால், பிஜேபி தான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும், அவர் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எதிர்க்கட்சியாக அவர் செயல்பட்டுக் கொண்டு, ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருப்பது போல attack செய்வது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது. பிரதமர் பேசும்போது 400 இடங்களை நாடாளுமன்ற தேர்தலில் கைப்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார்? அதுபற்றிய தங்களது கருத்து? மொத்தம் 400 தானா? 543 இடங்கள் இருக்கிறது. அதையும் கைப்பற்றுவேன் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கி இருக்கிறார்? எப்படி பார்க்கிறீர்கள். மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post 10 நாள் ஸ்பெயின் பயணம் முடிந்து திரும்பினார் ரூ.3440 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Spain ,PM K. ,Stalin ,Chennai ,K. Stalin ,Tamil Nadu ,PM K. Stalin ,Dinakaran ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...