×

சென்னை ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்..!!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ளது பிரபல எம்.ஜி.எம். மருத்துவமனை. இந்த மருத்துவமனை புதிதாக ஒரு கிளை மருத்துவமனையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பீட்டர் சாலையில் 10 மாடி கட்டிடத்தை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் கட்டுமான பணிகளையும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சாலையில் புதிதாக 10 மாடி மருத்துவமனை கட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மருத்துவமனை கட்டுமான அஸ்திவார பணியின்போது சுற்றுப்புறப் பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் பெரும்பாலாக மூத்த குடிமக்கள் வசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் பல்வேறு குடியிருப்புகள் இருப்பதனால் கட்டுமான பணிகளின் ஒலியால் அனைவருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக நள்ளிரவையும் தாண்டி அதிகாலை வரை அந்த பணிகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு கட்டுமான சத்தத்தை குறைக்கக்கோரி கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் 3 மாதத்தில் இந்த பணிகள் நிறைவடையும் என தெரிவித்த நிலையில், தொடர்ந்து ஒலியை கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ., காவல்துறை என அனைத்து தரப்புக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எனவே அஸ்திவாரம் போடும் பணியை மேற்கொள்ள மாலை 6 மணி முதல் காலை 8 மணிவரை தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன், நீதிபதி சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.எம்.டி.ஏ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புவனேஷ்குமார், கட்டடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி இன்னும் தரப்படவில்லை, உரிய கட்டணம் செலுத்தும்பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறார்கள். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

The post சென்னை ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : M.M. ,Alwarpetta, ,Chennai ,G. M. Icourt ,Alwarpetta, Chennai ,G. ,Chennai High Court ,M. G. M. Hospital ,Alvarpet, Chennai ,Alvarpet, ,
× RELATED வரவேற்பு அளிப்பதற்கு முன்னாள்...