×

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்: புழுதி பறப்பதை தடுக்க நடவடிக்கை

நெல்லை: நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை சுற்றிலும் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. பஸ்கள் வேகமாக செல்லும்போது புழுதி பறப்பதை தடுக்கும் வகையில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 2018ம் ஆண்டு இடிக்கப்பட்டு, புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.79 கோடி மதிப்பீட்டில் பேருந்துகள் நின்று செல்ல தரைதளம், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பூமிக்கு அடியில் வாகன நிறுத்தகம், மூன்று தளங்களில் கடை உள்ளிட்ட பல்வேறு வசதிகளோடு நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பணிகள் அனைத்தும் நிறைவுற்று கடந்தாண்டு டிசம்பர் மாதம் பஸ் நிலையத்தை திறக்க வேண்டிய சூழலில், வெள்ள பாதிப்பு காரணமாக பஸ் நிலையத்தின் சில பகுதிகள் சேதம் அடைந்தன. பூமிக்கு அடியில் வாகன காப்பகம் உள்ள பகுதியில் தண்ணீர் அதிகம் புகுந்ததால், அவற்றை வெளியேற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்து பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக பஸ் நிலையத்தை சுற்றிலும் நான்கு பகுதிகளிலும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

புழுதி படலமாக பஸ் நிலைய பகுதி காட்சியளித்ததால், அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள், பயணிகள் உள்ளிட்ட பலரும் சிரமத்திற்கு உள்ளாயினர். எனவே பஸ் நிலையத்தை சுற்றி அமைந்துள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையை புதிதாக அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

பஸ் நிலையத்தை சுற்றிலும் பள்ளங்களில் மண் கொட்டப்பட்டு ஜேசிபி உள்ளிட்ட எந்திரங்கள் மூலம் சாலை சமன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தார் சாலை அமைக்கும் பணி அங்கு முழு வீச்சில் நடக்கிறது. பல மாதங்களுக்கு பின்னர் பஸ்நிலையத்தை சுற்றி அமைந்துள்ள பல்லாங்குழி சாலைகள் சீரமைக்கப்பட்டு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து சந்திப்பு பஸ் நிலையத்துக்கு திரும்பும் பகுதியில் அமைந்துள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான சாலையையும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் பஸ் நிலையம் திறக்கப்படும் என கூறப்படுகிறது.

The post நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்: புழுதி பறப்பதை தடுக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nellai junction ,Nellai ,Nellai Junction Bus Station ,City ,
× RELATED நெல்லை வரதராஜ பெருமாள் கோயில்...