×

பயணம் வென்றது! களமும் வெல்லட்டும்!.. ஒற்றுமை இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை : இந்திய ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை :

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

மேகங்களின் மீது மிதப்பது போன்ற உணர்வுடன், வானில் பறக்கின்ற விமானத்திலிருந்து இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். ஸ்பெயின் நாட்டுப் பயணத்தை நிறைவு செய்து, நெஞ்சத்தில் தேங்கியிருக்கும் நினைவுகளுடன் தமிழ்நாட்டுக்குத் திரும்பும் நிலையில், தரையிறங்குவதற்கு முன்பாக என் இதயத்தில் உள்ளவற்றை அன்பு உடன்பிறப்புகளான உங்களிடம், உங்களில் ஒருவனான நான் இறக்கி வைத்துவிட வேண்டும் என்ற பேரன்பின் வெளிப்பாடே இந்த மடல்.

ஜனவரி 28 அன்று தொடங்கிய பயணத்திலிருந்து பிப்ரவரி 7-ஆம் நாள் தாய்மண் திரும்பும் வரையிலான பயண நாட்களின் எண்ணிக்கை பத்து. அதில் கிடைத்திருப்பது தமிழ்நாட்டிற்கான முதலீடு எனும் முத்து. 2021 மே 7-ஆம் நாள், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல், தமிழ்நாட்டின் தொழில்வளத்தைப் பெருக்கி, முந்தைய பத்தாண்டுகாலத்தில் படுபாதாளத்தில் தள்ளப்பட்ட பொருளாதார நிலையைச் சீர்செய்வதே திராவிட மாடல் அரசின் முதன்மை நோக்கமாக அமைந்தது. ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குக்கேற்ப, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 2022-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு நாடுகளில் துபாய், அபுதாபி ஆகிய இடங்களுக்கான பயணம் வெற்றிகரமாக அமைந்தது. 2023-ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளான சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்தேன். 2024-இன் தொடக்கத்தில் ஐரோப்பாவின் நான்காவது பொருளாதார நாடான ஸ்பெயின் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் பயணத்தை மேற்கொண்டேன்.

பத்து நாள் பயணத்திற்கிடையில் உடன்பிறப்புகளாம் உங்களின் நினைவு எழாத நாளுமில்லை, நேரமுமில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணாவும், அதனைக் கட்டிக்காத்து வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞரும் நமக்கு ஊட்டியுள்ள இலட்சிய உணர்வும் அதனால் உருவாகியுள்ள கொள்கை உறவும் எத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் மனதை விட்டு ஒருபோதும் நீங்காது. அந்த அண்ணாவின் நினைவு நாளை அமைதிப் பேரணியுடன் கடைப்பிடிக்கக் கோரி, ஸ்பெயின் நாட்டிலிருந்து நான் கடிதம் எழுதினேன். பயணத்தின் விவரங்களையும், அங்கு நடந்த நிகழ்வுகளையும், பயணத்தின் இலக்கில் அடைந்த வெற்றியையும் உடன்பிறப்புகளான உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்துடன் ஆகாய வீதியில் பயணித்தபடி இந்த விரிவான கடிதத்தை எழுதுகிறேன்.

உங்களால் தமிழ்நாட்டின் முதலமைச்சரான நான், ஜனவரி 28 அன்று ஸ்பெயின் நாட்டில் தரையிறங்கியதும் அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. தினேஷ் பட்நாயக் அவர்கள் என்னை அன்புடன் வரவேற்றார். தமிழ்நாட்டின் தொழில்வளத்தைப் பெருக்குவதற்கான முதலீடுகளை ஈர்க்கத்தான் இந்தப் பயணம் என்ற நம் நோக்கத்தை அவரிடம் தெரிவித்தபோது, தொழில்துறையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை அறிந்திருந்த இந்தியத் தூதர், நாம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் நம்மிடம் சொன்னபோது வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

ஸ்பெயின் நாட்டில் தரையிறங்கிய மறுநாளே முதலீட்டாளர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்நாட்டின் முக்கியமான தொழில்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர். அவர்களை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு அரசின் தொழில் – முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா, சென்னையில் ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் உலகத் தரத்துடன் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவிருப்பதை எடுத்துரைத்து, நமது மாநிலத்தில் உள்ள தொழிற்கட்டமைப்புகளை விளக்கி, ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் உரையாற்றும்போது, “இந்தியாவிலிருந்து பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து உங்களிடம் பேசியிருக்கலாம். முதலீடுகளைக் கோரியிருப்பார்கள். இந்தியாவின் முக்கியமான மாநிலங்களின் ஒன்றான தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவர்கள் உங்களுக்கு என்ன உத்தரவாதம் தருகிறார்களோ அதனை நிச்சயம் நிறைவேற்றித் தருவார்கள். அந்த மாநிலத்தில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் இதனை உணர்கின்றன. அதனால், நிச்சயமாக நீங்கள் முதலீடு செய்யலாம்” என்ற நம்பிக்கையைக் கொடுத்தார்.

முதலீட்டாளர் சந்திப்பிற்கு வந்திருந்த நிறுவனத்தினர் பலரின் முகங்களிலும் நம்பிக்கை பளிச்சிட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் பேசத் தொடங்கினேன். “ஸ்பெயின் மக்களைப் போலவே தமிழர்களும் தங்கள் மொழி மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள். எங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் என்கிற அறநூல் ஏறத்தாழ பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் நான்காவது பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாகத் திகழும் ஸ்பெயின் நாட்டில் ஃபார்ச்சூன் 500-இல் உள்ள நிறுவனங்களில் 8 நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன், ஃபார்ச்சூன் 2000-இல் உள்ள நிறுவனங்களில் 20 நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என அன்புடன் அழைக்கிறேன். ஏற்கனவே தமிழ்நாட்டில் 9 ஸ்பெயின் கம்பெனிகள் முதலீடுகள் செய்திருப்பதால் நீங்களும் நம்பிக்கையுடன் முதலீடுகள் செய்யலாம்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ள ஸ்பெயின் நாட்டு நிறுவனமான ரோகா, எங்கள் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பற்றி உங்களிடம் சொல்லியிருப்பார்கள். அவர்களுக்குத் தருவது போலவே அனைத்து ஒத்துழைப்பும் உங்களுக்கும் தரப்படும்” என்ற உறுதியினை வழங்கினேன். மொத்தம் 9 நிறுவனத்தினரைத் தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதன் பலனாகவும், தமிழ்நாடு அரசின் தொழிற்கட்டமைப்பின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையிலும் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவிருக்கின்றன என்கிற மகிழ்ச்சியான செய்தியைக் கழக உடன்பிறப்புகளிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

பனி மூட்டத்தை விலக்கிக் கொண்டு சூரியக் கதிர்கள் வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஸ்பெயின் நாட்டின் அதிகாலைப் பொழுதினைப் போல, தமிழ்நாட்டின் தொழில்துறையில் முன்பு சூழ்ந்திருந்த இருளும் பனியும் விலகி, வெளிச்சக் கதிர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் அரசின் அயராத முயற்சியினால் பாயத் தொடங்கியிருக்கின்றன. ஐரோப்பாவின் தனித்துவமான நாடுகளில் ஒன்று ஸ்பெயின் என்பதையும், எந்தெந்த வகையில் அது முக்கியமானது என்பதையும் பத்து நாள் பயணத்தில் அறிந்துகொள்ள முடிந்தது.

ஏறத்தாழ 4 கோடியே 75 லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின். ஒப்பீட்டளவில் தமிழ்நாடு என்கிற மாநிலத்தின் மக்கள் தொகையைவிட ஸ்பெயின் என்கிற நாட்டின் மக்கள்தொகை குறைவுதான். ஆனால், நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகிலும், பிற இடங்களிலும் மக்கள் நெருக்கமும் அவர்களின் புழக்கமும் அதிகமாக இருந்ததைக் காண முடிந்தது. இது பற்றி அங்குள்ளவர்களிடம் கேட்டபோது, “ஆண்டுக்கு 9 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயினுக்கு வருகிறார்கள். அதனால் எப்போதும் மக்கள் நெருக்கத்துடன் இந்த நாடு இருக்கும்” என்றனர்.

ஸ்பெயின் நாட்டின் தட்பவெப்பம் என்பது நம் நாட்டை, அதுவும் குறிப்பாக நமது மாநிலமான தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது மிகவும் குளிராகத்தான் தெரியும். ஆனால், ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது ஸ்பெயின் நாட்டின் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்குச் செல்வதில்லை என்பதால் மற்ற நாடுகளிலிருந்து இங்கு வருகிறார்கள். அத்துடன், ஸ்பெயின் நாட்டின் கலைப்படைப்புகள் உலகின் பல நாடுகளையும் ஈர்க்கக்கூடியனவாக இருக்கின்றன. அவற்றைப் பார்க்கவும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகிறார்கள்.

தலைநகர் மேட்ரிட் மற்றும் புகழ் மிக்க நகரங்களான பார்சிலோனா, செகோவியா, டொலிடோ எனப் பலவும் தனது பழம்பெருமை மிக்க கலைவடிவங்களால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. டொலிடோ நகரம், ஸ்பெயினின் பழமையான தலைநகரமாகும். நாங்கள் தங்கியிருந்த மேட்ரிட் நகரிலிருந்து ஒரு மணி நேரத்தில் காரில் செல்லக்கூடிய தூரம். போகும் வழியெல்லாம் ஆலிவ் மரங்கள் தலையசைத்து வரவேற்பது போல இருந்தன. “ஆலிவ்தான் இந்த மண்ணின் அழகு. எல்லாப் பக்கமும் நிறைந்திருக்கும்” என்று அங்குள்ளவர்கள் தெரிவித்தார்கள். பழமையான நகரங்கள் உள்ள ஸ்பெயினில் பார்த்த மனிதர்கள் பலரும் வயதானவர்களாக இருந்தார்கள். இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை முதியோர் அளவிற்கு இல்லை.

சீனாவிலும் ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் தொகையில் மூத்த குடிமக்கள் நிறைந்திருக்கிறார்கள். இளைஞர்களின் விகிதம் குறைவு. ஆனால், தமிழ்நாட்டில் இளைஞர்கள் அதிகம். அவர்கள் மிகப் பெரும் மனிதவளமாக இருப்பதுதான் நமக்கு பலம். அத்தகைய இளைஞர்களின் கல்விக்காவும், திறன் மேம்பாட்டிற்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளை நினைத்துப் பார்த்தேன். இன்னும் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன என்பதையும் அதற்காகத்தான் இத்தகைய முதலீடுகளை ஈர்க்கும் பயணங்கள் என்பதையும் உடன்பிறப்புகளான நீங்களும் உங்களில் ஒருவனான நானும் அறிவோம். இளைஞர்களின் ஆற்றல் அவர்களுக்கும் நாட்டிற்கும் பயன்படும் வகையில் வேலைவாய்ப்புகளிலும் கொள்கை சார்ந்தும் வளர்த்தெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

பழமைப் பாரம்பரியம் மிக்க டொலிடோ நகரத்திற்குள் நுழையும்போது ஓர் அரங்கம் கண்ணில் பட்டது. நம் ஊரில் ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதல் போட்டி போன்ற, ஸ்பெயினின் புகழ்மிக்க எருது விளையாட்டுப் போட்டிக்கான அரங்கம் அது. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டாக இந்த எருது விளையாட்டுப் போட்டிகள் அமைந்துள்ளன. மார்ச் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்த எருது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இது பிப்ரவரி மாதம் என்பதால், ஸ்பெயினின் ‘ஏறுதழுவதல்’ போட்டியைக் காண முடியவில்லை. எனினும், ஸ்பெயின் நாட்டின் பழம்பெருமைமிக்க அரங்கங்கள் போல, நம் தமிழ்ப் பண்பாட்டு விளையாட்டின் பெருமையைக் காத்திட மாமதுரையில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஏறுதழுவுதல் அரங்கமும் அதனைத் திறந்து வைத்த நிகழ்வும் மனதில் நிழலாடி, நிறைவைத் தந்தன.

ஸ்பெயின் நாட்டின் விளையாட்டுத் திடல்களில் கால்பந்து விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர். நம் நாட்டு இளைஞர்களுக்குக் கிரிக்கெட் போல, அந்த நாட்டிலும் அருகிலுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் கால்பந்து மிகவும் பிரபலம். உலகக் கோப்பை, ஐரோப்பியக் கோப்பை ஆகியவற்றுடன் கால்பந்து கிளப்கள் நடத்தும் போட்டிகளும் மிகவும் புகழ் பெற்றவை. நாங்கள் சென்றிருந்த நேரத்திலும் அங்கே கால்பந்து போட்டிகள் நடைபெறுவதை அறிந்து கொண்டோம்.

டொலிடோ நகரத்தின் அழகை இரசித்ததுடன், அதன் பழமைமிக்க வரலாற்றுச் சிறப்பையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘மூன்று பண்பாடுகளின் நகரம்’ என்ற சிறப்புப் பெயர் டொலிடோவுக்கு உண்டு. முதலில் யூதர்கள், பிறகு கிறிஸ்தவர்கள், அதன்பின் முஸ்லிம்கள் என மூன்று மதங்களைச் சார்ந்த மன்னர்களின் படையெடுப்பு நிகழ்ந்திருந்தாலும், மூன்று மதத்தின் மக்களும் அவரவர் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டு, ஒற்றுமையாக வாழ்ந்த – வாழ்ந்து வருகிற பெருமை டொலிடோ நகரத்திற்கு உண்டு.

கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் ரோமானிய அரசாட்சியின் அரண்மனையாக இருந்த இந்தக் கோட்டை, 15-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னரால் மீண்டும் பொலிவு பெற்றுள்ளது. பழமை மாறாத கோட்டையும் அதன் மதில்களும் டொலிடோ நகரத்திற்குப் பெருமை சேர்க்கின்றன. தொன்மை மாறாத கட்டடக்கலைகளைக் காப்பாற்றி, அடுத்த தலைமுறையினருக்குக் கலைச்செல்வமாக ஒப்படைக்கும் தொலைநோக்குப் பார்வையை அந்நாட்டில் காண முடிந்தது.

வேறு மதத்தைச் சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இன்றைய ஆட்சியாளர்கள் அதை இடித்துத் தகர்த்திடவும் இல்லை, மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்துத் தேர்தல் இலாபம் தேடும் அரசியலும் அங்கு இல்லை. மூன்று மதத்தினரின் பண்பாட்டுச் சிறப்பு மிக்க நகரமாக டொலிடோ இன்றும் திகழ்வதைக் காண முடிந்தது. இந்தப் பண்பாட்டுப் பெருமையும் பன்முகத்தன்மையும்தான் இந்தியாவுக்கும் சிறப்பு சேர்க்கக்கூடியது என்பதை நாம் மறந்துவிட முடியுமா?

கோட்டைகள் போலவே பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரிய தேவாலயங்களான கதீட்ரல்களும் பழமை மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் கட்டிய திருக்கோயில்கள் பலவும் திராவிடக் கட்டடக் கலையின் சின்னங்களாக விளங்குவதுபோல, ஐரோப்பியக் கட்டடக் கலையின் அடையாளங்களாக இந்த தேவாலயங்கள் திகழ்கின்றன.

வரும் வழியில், “இது என்ன இன்னொரு கோட்டை?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். “இது கோட்டை அல்ல, பிராடோ மியூசியம்” என்று தெரிவித்தனர். ஸ்பெயின் நாட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தும் விதமாக 1819-ஆம் ஆண்டில், அரண்மனை போன்ற இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நமது மன்னர்களின் வரலாற்றைக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் தெரிந்துகொள்வது போல, ஸ்பெயின் நாட்டை ஆட்சி செய்த மன்னர்களின் வரலாறு – ஆட்சி முறை ஆகியவற்றை அறிந்து கொள்ள அவர்கள் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களே சான்றுகளாக உள்ளன. அத்தகைய பழமைமிக்க ஓவியங்களைப் பாதுகாத்து, அவற்றின் வாயிலாக 12-ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்பெயின் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் பிராடோ அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

நாங்கள் அங்கே சென்றிருந்தபோது இளைய தலைமுறையினர் பலரும் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதைக் காண முடிந்தது. வரலாற்றை ஒவ்வொரு தலைமுறைக்கும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். நம்மிடம் பெருமைமிகு வரலாறு உண்டு. நாம் அதனைச் சொல்லத் தவறியதால், வரலாறு இல்லாத ஒரு கூட்டம், நம் வரலாற்றைத் திரிக்கும். பண்பாட்டைச் சிதைக்கும். மொழி மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும். வதந்திகளைப் பரப்பும். அவதூறுகளால் அரசியல் பிழைப்பு நடத்தும். உண்மை வரலாற்றை இளந்தலைமுறையினர் உணர்ந்துகொண்டால்தான், வரலாற்றைச் சிதைக்க நினைக்கும் வதந்தியாளர்களை, அவர்கள் தங்களின் வாக்குரிமையால் விரட்டி அடிப்பார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் ஆபத்து நேராமல் தடுப்பார்கள்.

திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு, கீழடி அகழாய்வுகளில் கிடைத்த தமிழரின் நாகரிக – பண்பாட்டு வரலாற்றுச் சுவடுகளை ஆவணப்படுத்தும் வகையில் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றங்கரை நாகரிகம் முதல் வைக்கம் போராட்டம் வரை உண்மை வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை அரசாங்கம் மட்டுமல்ல, தமிழர் என்ற உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தமிழ்நாட்டில் உள்ள நம் கழகத்தினரிடமும், அயல்நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களைச் சந்தித்த இனிமையான நிகழ்விலும் இதனைக் கூறினேன்.

ஸ்பெயின் நாடு தன் வரலாற்றையும் பண்பாட்டையும் பாதுகாப்பதுடன் மொழியையும் வளப்படுத்தி உலகம் முழுவதும் பரவச் செய்திருப்பதைக் கண்டு வியந்தேன். நாலே முக்கால் கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு, 9 கோடி சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான அடிப்படைக் காரணம், உலகமெங்கும் பரவியுள்ள ஸ்பானிஷ் மொழிதான்.

ஐரோப்பிய நாட்டவர் பிற கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு கடல்வழி கண்டறிய பயணித்தபோது, அதில் ஸ்பெயின் நாட்டின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, தென் அமெரிக்க நாடுகள் பலவற்றிற்கு ஸ்பெயின் நாட்டவர் கடல்வழியாகச் சென்றதுடன் அங்கு குடியேறிய காரணத்தால், அந்த நாடுகளில் ஸ்பானிஷ் மொழி இன்று அலுவல் மொழியாக இருக்கிறது. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக உலகளவில் பரவிய ஐரோப்பிய மொழிகளில் ஸ்பானிஷ் மொழிக்கு முக்கிய இடம் உண்டு. 20 நாடுகளில் அது அலுவல் மொழியாக உள்ளது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஸ்பெயினுக்குச் சுற்றுலாப் பயணிகளாக வருகிறார்கள். தங்கள் முன்னோர்களின் நிலத்தைப் பார்க்கும் ஆவலுடன் வருகிறார்கள்.

தமிழ் மன்னர்கள் தங்களின் கடற்படை மூலம் தெற்காசிய நாடுகளான இன்றைய இந்தோனேஷியா, கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அன்றைய பகுதிகளில் பண்பாட்டுச் சின்னங்களை நிறுவி, தமிழ் மொழியைப் பொறித்தது போல, தமிழர்கள் கடல்வழி வாணிகம் மேற்கொண்டு தமிழ்நாட்டில் கிடைத்த பொருட்களுடன் தமிழ் மொழியையும் கிரேக்கம்-ரோமாபுரி பேரரசுகளில் பரப்பினார்களோ அதுபோல தென் அமெரிக்க நாடுகளில் ஸ்பானிஷ் மொழி செல்வாக்குப் பெற்றிருக்கிறது. அது ஸ்பெயின் நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிறது என்பதை இந்தப் பயணத்தில் உணர்ந்து கொண்டேன்.

பயணம் என்பது உலகத்தைக் காண்பதற்கான ஜன்னல். நாம் அறியாத பல செய்திகளை நமக்கு நேரடியாகக் கற்றுத் தருவதற்குப் பயணத்தைப் போன்ற சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது. அதனை இந்தப் பத்து நாள் பயணத்தில் முழுமையாக அறிந்தேன். பயணத்தில் இருந்தாலும் எனக்குள்ள பொறுப்புகளையும் அதற்குரிய பணிகளையும் மறந்துவிடவில்லை. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தருணம் நெருங்கி வருவதால் அது குறித்துக் காணொலி வாயிலாக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டேன். கழகத்தின் தலைவர் என்ற முறையில், உடன்பிறப்புகளான உங்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் கழக நிர்வாகிகளிடம் தொடர்ந்து உரையாடினேன்.

உங்களில் ஒருவனான நான், இதற்கு முன் எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, பிப்ரவரி 3-ஆம் நாள் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் தலைமையில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியைச் சிறப்பாக நடத்தியதுடன், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் – நகரங்கள் – ஒன்றியங்களில் அண்ணா நினைவு நாள் ஊர்வலங்களும் நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெற்றிருப்பதை அறிந்தேன்.

நம்முடைய உடனடி களப்பணி என்பது நாடாளுமன்றத் தேர்தல் களம்தான். அதற்காக அமைக்கப்பட்ட மூன்று குழுக்களுமே தங்களுடைய பணியைத் தொடங்கி, சிறப்பாகத் தொடர்வதை அறிந்துகொண்டேன். தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு நடத்தும் குழு முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நல்லமுறையில் நிறைவு செய்துள்ளது. கழகத்தினரின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அழைத்து அண்ணா அறிவாலயத்தில் விரிவான ஆலோசனை நடத்தி, கள நிலவரத்தை எடுத்துரைத்து, வெற்றிக்கான வியூகத்தை வகுத்துத் தந்திருக்கிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. தலைமையின் சொல்லை உத்தரவாக – கட்டளையாக ஏற்றுச் செயல்பட்டு வருவது மகிழ்வைத் தருகிறது. இது எப்போதும் தொடர வேண்டும்.

உங்களில் ஒருவனான நான் எளியவன். உங்களால் வழங்கப்பட்ட கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவன். பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் ஆகியோரிடம் கற்றுக்கொண்டதை வைத்து ஓயாமல் உழைக்கக்கூடியவன். இந்த இயக்கத்தைத் தோளிலும், அதன் தொண்டர்களை நெஞ்சத்தில் சுமந்து பயணிப்பவன். உங்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் இடம்பெற்றிருக்கும் உங்களில் ஒருவன். தலைவன் வெளிநாடு சென்றிருந்தாலும், தலைமையின் உத்தரவை நிறைவேற்றுவோம் என்கிற இந்த உணர்வும், கழகத்தினர் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் ஒற்றுமையும் இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்திட முடியாது. அந்த வகையில், உடன்பிறப்புகளாம் உங்களுக்குத் தலைவராகும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்கிறேன்.

தனிப்பட்ட என்னுடைய – உங்களுடைய மகிழ்ச்சியைவிட, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தகர்த்து நாட்டைக் காப்பாற்றும் போது ஏற்படும் மகிழ்ச்சியே முதன்மையானது. ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுபோல, தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும். தமிழ்நாடு வளம் காணும். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும். அதற்கான களம் நம்மை அழைக்கிறது. ஆயத்தமாவோம்!

The post பயணம் வென்றது! களமும் வெல்லட்டும்!.. ஒற்றுமை இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,India ,MLA ,K. ,Stalin ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...