×

ஓரம்போ… ‘Art வண்டி’ வருது!

நன்றி குங்குமம் தோழி

கலை என்பது அனைவரிடமும் உள்ள ஒரு அரிய வகை பொக்கிஷம். அது சமையல் கலையாகவோ, ஓவியக் கலையாகவோ, வீடு, அலுவலகம் அலங்கரிக்கும் கலையாகவோ அல்லது வேறு துறை சார்ந்த கலையாகவோ இருக்கலாம். அவர்களில் ஒரு சிலருக்கே அதனை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. சிலருக்கு மறுக்கப்படுகிறது. குறிப்பாக புறநகர் அல்லது கிராமப்புறங்களில் இருக்கும் குழந்தைகள்.

அவர்களின் கலைத் திறமையை வளர்க்கும் விதமாகவும், கலைகள் பற்றிய விழிப்புணர்வினை ஒரு வேன் மூலம் ஏற்படுத்தி வருகிறார்கள் நலந்தாவே குழுவினர். பொதுவாக ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல கார் அல்லது வேன் போன்ற வண்டியினை பயன்படுத்துவோம். ஆனால் இவர்கள் குழந்தைகளுக்கு கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்களை கவரும் வகையில் கண்களை கவரும் பல வண்ணங்களில் இந்த ‘Art வண்டி’யினை அமைத்துள்ளனர்.

Art வண்டியின் பின்னணியினையும், அதன் செயல்பாடுகளையும் அதனால் குழந்தைகள் அடையும் பயனையும் விளக்குகின்றனர், இந்த திட்டத்தின் செயலாளர் வினோத்குமார் மற்றும் நலந்தாவேயின் உறுப்பினரான ஸ்வர்ண ப்ரியா.‘‘பொதுவாகவே குழந்தைகளிடையே நிறைய திறமை ஒளிந்துள்ளது. அதனை வெளிக் கொணர்வதற்காகவே துவங்கப்பட்டதுதான் Art வண்டி’’ என்ற வினோத் இந்த வண்டியினை துவங்க ஒரு சின்ன குழந்தைதான் காரணம் என்று குறிப்பிட்டார்.

‘‘நலந்தாவே நிறுவனர் ராமின் நெருங்கிய நண்பருடைய குழந்தைக்காகத்தான் இந்த Art வண்டி என்கிற கான்செப்ட்டை 2022ல் கொண்டு வந்தோம். இந்த ஒன்றரை வருடத்தில் இதுவரை கிட்டதட்ட 30 பள்ளிகளில் Art வண்டி மூலம் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதற்கும் இசை, நாடகம், நடனம் என அனைத்து வகையான கலைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அதனைப்பற்றி விளக்கத்துடன் கற்பிப்பதோடு, அவர்களை இதில் பங்கேற்கவும் செய்துள்ளோம். பள்ளிகள் மட்டுமல்லாது, அரசு குழந்தைகள் காப்பகம், குறிப்பிட்ட கிராமங்களில் இருக்கும் குடும்பங்கள் என அனைத்து பகுதியிலும் சென்றுவரும் எங்களின் குழு தற்போது செங்கல்பட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் உள்ளது’’ எனக் குறிப்பிட்டார். இந்த வண்டி அமைப்பதற்கான முக்கிய நோக்கம் என்ன என்பதனையும் பகிர்ந்து கொண்டார்.

‘‘குழந்தைகளிடையே கலை ஓவியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. முதலில் ‘Art ட்ரக்’ என்று தான் பெயர் வைக்க நினைத்தோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என Art வண்டி என்று பெயரிட்டோம். இந்த வண்டி ஆரம்பித்த பிறகு அதன் மூலம் பெருங்களத்தூர் அருகே செங்கல்பட்டு, ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில்தான் எங்களின் முதல் வர்க்‌ஷாப்பினை துவங்கினோம்.

குழந்தைகள் இதனை எப்படி வரவேற்பார்கள் என்று எங்களுக்கு தெரியல. நாங்களும் ஒருவித ஆர்வத்துடன்தான் இருந்தோம். ஆனால் நிகழ்ச்சி போகப்போக பசங்களிடம் ஆர்வம் அதிகரிக்க ஆரம்பிச்சது. இப்போது கூட எங்க வண்டி அவர்கள் பள்ளி வளாகம் வழியே சென்றால் உற்சாகமாயிடுவாங்க. நடுநிலைப்பள்ளி குழந்தைகள் முதல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை அனைவரையும் முதன்மையாக வைத்துதான் இந்த Art வண்டி செயல்படுகிறது. இதில் ஓவியம் வரைதல் மட்டும் இல்லாமல், பாட்டு பாடுதல், நடனம், கதை என அனைத்து கலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியும் நடக்கும்.

ஒரு பள்ளிக்கு நாங்க அதிகபட்சம் 5 நாட்கள் ஒதுக்குவோம். இந்த நாட்களில் அவர்கள் வரைந்த ஓவியங்கள், கலந்து கொண்ட விளையாட்டுகள், இசை, நடனம் என அனைத்தையும் பதிவு செய்வோம். இறுதி நாட்களில் அதை அவர்களுக்கே ஒளிபரப்பி காட்டுவோம். அதையெல்லாம் பார்க்கும் போது குழந்தைகள் குஷியாகிடுவாங்க. பள்ளிகள் மட்டுமில்லாமல் அதிகம் மக்கள் கூடும் சில இடங்களிலும், எங்களின் வண்டி பயணித்துள்ளது. அங்குள்ள குழந்தைகள் வரைந்த ஓவியங்களை அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் கண்காட்சி போல்
வைப்போம்.

ஆரம்பத்தில் தனியாகத்தான் நாங்க செயல்பட்டு வந்தோம். எங்களின் வேலையினை பார்த்து சில தன்னார்வலர்கள் முன்வந்து எங்களுடன் இணைந்து செயல்படவும் செய்கிறார்கள். அவ்வாறு இணைய விரும்பும் தன்னார்வலர்களிடம் நாங்க வைக்கும் கோரிக்கை அவர்கள் ஐந்து நாட்களும் எங்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான். தற்போது ஓவியம், இசை, நடனம் போன்றவற்றை தான் நாங்க செயல்படுத்தி வருகிறோம். இதனைத் தொடர்ந்து மேலும் சில கலைகளை நாங்க இணைக்க இருக்கிறோம்.

குழந்தைகளுக்கு எளிதாகவும் மற்றும் அவர்கள் விரும்பும் கலைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அது என்ன என்று தேர்வு செய்த பிறகு அதனையும் இந்த திட்டத்தில் இணைக்கும் எண்ணம் உள்ளது. தற்போது செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும்தான் நாங்க பயணம் செய்து வருகிறோம். இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பயணம் செய்யும் எண்ணம் உள்ளது. எங்க குழுவில் களப்பணியில் கோவிந்தராஜ், விஜய கிருஷ்ணன் மற்றும் மூர்த்தி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் கதைப் புத்தக பாடத்திட்டத்தை நலந்தாவே குழு உருவாக்கி கொடுத்துள்ளது.

அதன் மூலம்தான் குழந்தைகளுக்கு பலவிதமான செயல்பாடுகளை செய்ய சொல்வோம். இதுவரை 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்களின் கலைப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர். அதை ஒரு தொகுப்பாக டிஜிட்டல் முறையில் அமைத்து கடந்த டிசம்பர் மாதம் மெட்ராஸ் எழுத்தறிவு சங்கத்தில் காட்சிப்படுத்தினோம். மேலும் எங்க பயணத்தில் பங்கு பெரும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும் வழங்குகிறோம். இது அவர்களை மேலும் ஊக்கமளிக்கும்.

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரிடமும் இருக்கும் பல்வேறு கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வரணும் என்பது இதன் நோக்கம். எங்க வண்டி எத்தனை கிராமங்களில் பயணித்துள்ளது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. கடந்த இரண்டு ஆண்டில் செங்கல்பட்டில் மட்டுமே 24 வர்க்‌ஷாப்பினை நடத்தியிருக்கோம். இதைத் தவிர, சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் அழைப்பினை ஏற்று அங்கு வர்க்‌ஷாப்களை நடத்தியிருக்கோம். ஒவ்வொரு இடத்திற்கு நாங்க பயணிக்கும் போது அங்கு குழந்தைகள் எங்களுக்கு அளிக்கும் வரவேற்புதான் Art வண்டி திட்டத்தின் வெற்றிக்கான அடையாளம்’’ என்றார் வினோத்.

ஸ்வர்ண ப்ரியா, நலந்தாவே திட்ட உறுப்பினர்.‘‘நலந்தாவே என்பது கலையை ஊக்குவிப்பதற்காக 15 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்வித்துறை சேர்ந்த ஒரு அமைப்பு. கலைகளின் மூலம் குழந்தைகளுக்கான கல்வியினை கற்பிக்க முடியும் என்பது தான் எங்களின் தாரக மந்திரம். சிறியவர்கள் முதல் வளரிளம் பருவம் வரை அனைவரின் கலைத்திறமைகளை வளர்ப்பதற்காகவே நலந்தாவே துவங்கப்பட்டது. நாங்க ஓவியம் என்றில்லாமல் கைவினைப் பொருட்கள் செய்வது, நடனம், நாடகம் என பல வகையான கலையினை ஆதரித்து வருகிறோம்.

இதில் முழு நேரமாக மட்டுமில்லாமல் பகுதி நேரமாகவும் ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் சில பள்ளிகளுக்கு நேரடியாக சென்று அங்கு கலை குறித்து விழிப்புணர்வு, கலை வழியில் கல்வி ஆகியவற்றை சொல்லிக்கொடுப்பார்கள். எங்களின் அலுவலகம் சென்னை மற்றும் டெல்லியில் இருப்பதால், அந்த அரசுடன் இணைந்து சில ப்ராஜெக்ட்டுகள் செய்திருக்கோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ‘சகி’ என்ற ப்ராஜெக்ட் இளம் பெண்களை மையமாக வைத்து உருவாக்கியது. இதன் மூலம் அவர்களுக்கான உடல் மற்றும் மன ஆரோக்கிய வளர்ச்சி குறித்து சொல்லிக் கொடுப்போம்.

‘Art வண்டி’ பல்வேறு மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் கலைத் திறனை அதிகரிக்க அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இதனைத் தொடர்ந்து ‘Chennai Children Choir’, அடிமட்ட குடும்ப பின்னணியில் இருக்கும் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளின் இசைத் திறமையை வளர்க்க துவங்கப்பட்ட திட்டம். இவை மட்டுமில்லாமல் மேலும் பல திட்டங்களை நாங்க எங்க அமைப்பு மூலம் செயல்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post ஓரம்போ… ‘Art வண்டி’ வருது! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...