×

மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனையை படித்தார் ஜஸ்ப்ரித் பும்ரா!

துபாய்: டெஸ்ட் பவுலர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்ததன் மூலம், கிரிக்கெட்டின் 3 ஃபார்மட்களிலும் முதலிடத்தில் இருந்துள்ள முதல் பவுலர் என்ற சாதனையை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.

டெஸ்ட் பவுலர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் 881 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தைப் பிடித்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தரவரிசையில் முதலிடத்தில் நீடித்து வந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதன் காரணமாக அவர் 841 புள்ளிகளுடன் 3வது இடித்திற்கு தள்ளப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 851 புள்ளிகளுடன் தனது 2வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

பவுலிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இந்தியாவின் நான்காவது வீரர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆவார். ஒருநாள் மற்றும் டி20 பவுலிங் தரவரிசையில் முந்தைய காலங்களில் பும்ரா முதலிடத்தை அலங்கரித்துள்ளார். இதே போல் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்திருந்தார்.

The post மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனையை படித்தார் ஜஸ்ப்ரித் பும்ரா! appeared first on Dinakaran.

Tags : Jasprit Bumrah ,Dubai ,ICC ,Dinakaran ,
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1