×

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் 5ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது!!

சென்னை :போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொடங்கியது. சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்பட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளன.பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. தொழிலாளார் முன்னேற்ற சங்க பேரவை (தொமுச) தவிர மற்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டிசை வழங்கின.

இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக்கழக நிர்வாகங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. டிச.27, ஜன.3, ஜன.8, ஜனவரி 19 ஆகிய தினங்களில் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் முடிவுகள் எட்டப்படவில்லை. இதனிடையே வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் 5ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொடங்கியது. தொழிலாளர் தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமை வகித்தார். பேச்சுவார்த்தையில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் மற்றும் இதர போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் மற்றும் சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்ளிட்ட 27 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

The post பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் 5ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai TMS ,CIDU ,Anna Union ,AITUC ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...