மும்பை:ஹிருத்திக் ரோஷன் – தீபிகா படுகோனின் முத்தக் காட்சிக்கு கண்டனம் தெரிவித்து விமானப்படை அதிகாரி ஒருவர் சட்ட நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பாலிவுட் பிரபலங்களான நடிகர் ஹிருத்திக் ரோஷன் – நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படமான ‘ஃபைட்டர்’ என்ற படத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகளாக ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருவருக்கும் இடையிலான முத்தக் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதனை எதிர்த்து அசாமை சேர்ந்த விமானப்படை அதிகாரி சவுமியா தீப் தாஸ் என்பவர், சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து சவுமியா தீப் தாஸ் கூறுகையில், ‘இந்திய விமானப் படையின் சீருடை அணிந்திருந்த நிலையில், ஹிருத்திக் ரோஷன் – தீபிகா படுகோன் ஆகிய இருவரும் முத்தமிடும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காட்சிகள், இந்திய விமானப்படையை அவமதிக்கும் காட்சியாக கருதுகிறேன்.
இந்திய விமானப் படையின் சீருடையானது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் தன்னலமற்ற சேவைக்கான சக்திவாய்ந்த சின்னமாகும். தனிப்பட்ட காதல் விவகாரங்களை ஊக்குவிக்கும் காட்சிக்கு, இந்திய விமானப் படையின் சீருடையைப் பயன்படுத்துவது, அதன் கண்ணியத்தை தவறாக சித்தரிப்பது போன்று உள்ளது. எனவே இந்த காட்சிகளை நீக்க வேண்டும். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஹிருத்திக் ரோஷன் – தீபிகா படுகோனின் முத்தக் காட்சிக்கு சட்ட நோட்டீஸ்: விமானப்படை அதிகாரி காட்டம் appeared first on Dinakaran.