×

உல்லாசத்திற்கு வீட்டிற்கு அழைத்து மென் பொறியாளரிடம் கத்திமுனையில் ரூ.25 ஆயிரம் பணம், வெள்ளி செயின் பறிப்பு: முன்னாள் காதலி உட்பட 3 பேர் கைது

சென்னை: சென்னையில் ஐடி நிறுவன ஊழியரை உல்லாசத்திற்கு வீட்டிற்கு அழைத்து கத்தி முனையில் ரூ.25 ஆயிரம் பணம், வெள்ளி செயின் பறித்த முன்னாள் காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(37). மென் பொறியாளரான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் எம்ஜிஆர் நகர் அன்னை சத்தியா நகரை சேர்ந்த பூவிதா(20) என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கமாகியுள்ளார். இருவரும் அடிக்கடி செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பூவிதா நேற்று தனது காதலனான விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு, நான் வீட்டில் தனியாக இருக்கிறேன். ‘உங்கள் நினைவாக இருக்கிறது. எனது வீட்டிற்கு வாருங்கள்’ என்று கூறியுள்ளார். காதலி பூவிதாவின் ஆசை வார்த்தையை நம்பி, விக்னேஸ்வரன் உற்சாக மிகுதியில் ‘சாக்லெட்’ வாங்கி கொண்டு சென்றுள்ளார். வீட்டிற்கு வந்ததும், பூவிதா தண்ணீர் கொடுத்து உபசரித்துள்ளார். பிறகு வாங்கி வந்த சாக்லெட்டை பூவிதாவிற்கு விக்னேஸ்வரன் கொடுத்தும், அவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார்.

இதனால் இன்ப அதிர்ச்சியில் இருந்த விக்னேஸ்வரன், தனது காதலியான பூவிதாவுடன் உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார். அப்போது படுக்கை அறையில் ஏற்கனவே பதுங்கி இருந்த 2 பேர் திடீரென விக்னேஸ்வரனை பிடித்து கத்திமுனையில், இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய வந்ததாக சத்தம் போட்டு உன்னை அசிங்கப்படுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத விக்னேஸ்வரன் தனது காதலி பூவிதாவிடம் என்ன இது என்று கேட்டுள்ளார். உடனே அவர் எனக்கு உடனே ரூ.40 ஆயிரம் பணம் வேண்டும். கொடுத்தால் நீ மரியாதையுடன் வெளியே செல்வாய், இல்லை என்றால் அசிங்கப்பட்டுதான் செல்வாய் என்று மிரட்டியுள்ளார்.

அப்போது விக்னேஸ்வரன் என்னிடம் பணம் இல்லை என்று கூறி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். உடனே பூவிதாவுடன் இருந்த 2 பேர் விக்னேஸ்வரனை தாக்கி கத்தி முனையில் அவரது செல்போனில் இருந்து ரூ.25 ஆயிரம் கூகுள் பே மூலம் பறித்துள்ளனர். அதோடு இல்லாமல் அவர் கழுத்தில் அணிந்து இருந்த வெள்ளி செயினையும் பறித்தனர். மேலும் ரூ.15 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். உடனே விக்னேஸ்வரன் ‘நான் வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி கூகுள் பே மூலம் அனுப்புகிறேன்’ என்று நைசாக பேசி தனது காதலியான பூவிதா மற்றும் 2 பேரிடம் இருந்து தப்பியுள்ளார்.

பின்னர் மென் பொறியாளர் விக்னேஸ்வரன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து எம்ஜிஆர்.நகர் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இளம் பெண் பூவிதாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பூவிதாவுக்கு திருமணம் நடந்து அவரது கணவர் கொலை வழக்கு தொடர்பாக தற்போது சிறையில் இருப்பது தெரியவந்தது. கணவர் சிறையில் இருப்பதால், வேறு ஒரு ஆண் நண்பருடன் பூவிதா வசித்து வருவது தெரியவந்தது.

பூவிதாவுக்கு விக்னேஸ்வரன் போல் பல ஆண் நண்பர்கள் இருப்பதும், அவர்களுடன் சென்று மது அருந்திவிட்டு ஜாலியாக இருந்துவிட்டு, பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்றால், அவர்களை தனது ஆண் நண்பர்கள் மூலம் மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இதுபோல் 10க்கும் மேற்பட்டோரிடம் பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அந்த வகையில் தான் விக்னேஸ்வரனை, பூவிதா உல்லாசத்திற்கு அழைத்து, தனது ஆண் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மற்றும் கூலி தொழிலாளியான கிருஷ்ணனை வைத்து மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக மென் பொறியாளர் விக்னேஸ்வரனிடம் கத்தி முனையில் பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்து, இளம் பெண் பூவிதா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் ஏழுமலை, கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உல்லாசத்திற்கு வீட்டிற்கு அழைத்து மென் பொறியாளரிடம் கத்திமுனையில் ரூ.25 ஆயிரம் பணம், வெள்ளி செயின் பறிப்பு: முன்னாள் காதலி உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vigneswaran ,Vyasarpadi Sharma Nagar, Chennai.… ,
× RELATED 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம்...