×

யார் பெரிய ரவுடி என்பதில் மோதல் இருந்ததால் காசிமேடு ரவுடியை கத்தியால் வெட்டி கொன்றோம்: உதவி ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்த 2 பேர் வாக்குமூலம்

தண்டையார்பேட்டை: யார் பெரிய ரவுடி என்பதில் எங்களுக்குள் மோதல் இருந்து வந்ததால், காசிமேடு ரவுடியை கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்தோம் என ராயபுரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்த 2 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை காசிமேடு பவர்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (28). பிரபல ரவுடி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் புதுமனைகுப்பம் பகுதியில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் வெங்கட்ராமனை சரமாரி கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காசிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த ரவுடி வெங்கட்ராமனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலையில் தொடர்புடைய முகேஷ் (19) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று ராயபுரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் 2 பேர் சரணடைந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காசிமேடு இந்திராநகரை சேர்ந்த விமல் குமார் (23), காசிமேடு சிஜி காலனியை சேர்ந்த பூபாலன் (21) என்பது தெரியவந்தது. பிரபல ரவுடியான இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெங்கட்ராமனுக்கும், விமல்குமாருக்கும் யார் பெரிய ரவுடி என்பதில் மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி இருவரும் மோதிக்கொள்வார்களாம்.

வழக்கம்போல் இரு தினங்களுக்கு முன்பு இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெங்கட்ராமனை விமல்குமாரும் பூபாலனும் சரமாரி வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவலை அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post யார் பெரிய ரவுடி என்பதில் மோதல் இருந்ததால் காசிமேடு ரவுடியை கத்தியால் வெட்டி கொன்றோம்: உதவி ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்த 2 பேர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Kasimedu ,Thandaiyarpet ,Rayapuram Assistant Commissioner ,Chennai ,Kasimedu Powerkuppam ,Kasimedu Rowdy ,Assistant Commissioner's Office ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...