×

புதுச்சேரி தொகுதியில் கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி தொகுதியில் கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி உள்ளது. இங்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. புதுச்சேரியில் ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி உள்ளது. இந்த நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிருவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடம் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 14ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், மாநில முதலமைச்சருமான ரங்கசாமி கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது; நமது ஆட்சியில் சொன்னதை செய்துள்ளோம்; அதை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும். புதுச்சேரி அரசானது அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் ஒன்றிய அரசின் நிதி பெற்று மாநில மக்களுக்கான வளர்ச்சிகளை தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எதிர்க்கட்சியினர் ஏதாவது ஒரு குறை கூற வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாக தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, வருகின்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். வரும் நாடாளுமன்ற தேர்தலில், என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, அனைத்து தொகுதியில் உள்ள நிர்வாகிகள் முழு மூச்சில் இறங்கி வேலை செய்து, கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைப்பது நமது கடமை. அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும் என தெரிவித்தார். கட்சியை பலப்படுத்த 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு மற்றும் 10 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படும் எனவும் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார், முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது பாஜக சார்பில் தொகுதியை விட்டுக்கொடுக்குமாறு பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் கேட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரேயொரு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடுவதை முதலமைச்சர் ரங்கசாமி உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post புதுச்சேரி தொகுதியில் கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ரங்கசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Coalition Party ,Puducherry ,Rangasamy ,Chief Minister ,Puducherry R. ,Congress ,BJP ,N. R. Congress ,Rangasami ,Dinakaran ,
× RELATED கொடி பிடிக்க கூட ஆளில்லையே…