×

கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் காட்டெருமைகள்

*நிரந்தர தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

கொடைக்கானல் : கொடைக்கானலில் குடியிருப்புப் பகுதிகள், சுற்றுலா பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டத்தை நிரந்தரமாக தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலத்தினர் மற்றும் வெளிநாட்டினரும் அதிகளவில் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர்.

மோயர் பாய்ண்ட், குணா குகை, நட்சத்திர ஏரி, அப்சர்வேட்டரி, தொப்பிதூக்கி பாறை, தூண் பாறை, சில்வர் பால்ஸ் பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கடந்த இரண்டு மாதங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. மேலும் கோடைகாலம் துவங்க உள்ளதால் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கொடைக்கானல் நகர் பகுதி, சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்கள், பயணிகளை அச்சுறுத்தி வருகின்றன. காட்டெருமைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட தனி குழுவினரை வனத்துறையினர் அமைத்து உள்ளனர். இருப்பினும் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் அவை புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைகின்றனர்.

மேலும் அவை சாலைகளை கடந்து செல்லும் போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது அதனை சரி செய்வது சிரமமாக உள்ளது.
எனவே, முக்கிய சுற்றுலா நகரமாக உள்ள கொடைக்கானல் குடியிருப்புப் பகுதி மற்றும் சாலைகளில் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை தடுக்க நிரந்தர தீர்வு காணும் வகையில் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் காட்டெருமைகள் appeared first on Dinakaran.

Tags : Bison ,Kodaikanal ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை