×

கடந்த 2023ம் ஆண்டில் 94 சதவீத குற்ற வழக்குகளில் களவு சொத்துக்கள் மீட்பு

*எஸ்பி தங்கதுரை தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டில், 94 சதவீத குற்ற வழக்குகள் கண்டுபிடித்து, களவு சொத்துக்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக எஸ்பி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை என 5 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இதன் கீழ் 30 போலீஸ் ஸ்டேஷன்கள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில், கடந்த 2022ம் ஆண்டை காட்டிலும், 2023ம் ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்தில் 613 பேர் இறந்துள்ளனர். 2023ம் ஆண்டில் 707 பேர் இறந்துள்ளனர். அதேபோல, 2022ம் ஆண்டு சாலை விபத்தில் 1392 பேரும், 2023ம் ஆண்டு 1431 பேரும் காயமடைந்துள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2022ம் ஆண்டு 1 லட்சத்து 35 ஆயிரத்து 879 வழக்குகளும், 2023ம் ஆண்டு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 971 வழக்குகளும் பதிவாகி உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு 51 கொலைகளும், 2023ம் ஆண்டு 59 கொலைகளும் நடந்துள்ளன. 2022ம் ஆண்டில் 36 கொலை முயற்சி வழக்குகளும், 2023ம் ஆண்டில் 19 கொலை முயற்சி வழக்குகளும் மாவட்டத்தில் பதிவாகி உள்ளன. மேலும் அடிதடி வழக்குகள், கடந்த 2022ம் ஆண்டு 580ம், 2023ல் 569 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

கடந்த 2022ம் ஆண்டில், பணத்திற்காக 2 ஆதாய கொலைகள் நடந்துள்ளன. 2023ம் ஆண்டில் அது போன்ற குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 6,777 களவு போயுள்ளன. அதில் ரூ.1 கோடியே 18 லட்சத்து 23,024 மீட்கப்பட்டுள்ளது. இது 59 சதவீதம் ஆகும். அதே நேரத்தில், 2023ம் ஆண்டில் ரூ.2 கோடியே 60 லட்சத்து 90,953 களவு போனதில், ரூ.1 கோடியே 56 லட்சத்து 96,182 மீட்கப்பட்டுள்ளது. இது 60 சதவீதம் ஆகும்.

மேலும், கடந்த 2022ம் ஆண்டில் மதுவிலக்கு வழக்குகள் 4190ம், 2023ம் ஆண்டு 5,687 வழக்குகளும் பதிவாகி உள்ளன. குட்கா வழக்குகள் 2022ம் ஆண்டு 527ம், 2023ம் ஆண்டு 1422 வழக்குகளும் பதிவாகி உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு குட்கா கடத்திய 28 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டில் 278 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு 249 கஞ்சா வழக்குகளும், 2023ம் ஆண்டு 418 கஞ்சா வழக்குகளும் பதிவாகி உள்ளன. கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்களில் 107 பேரின் வங்கி கணக்குகள் கடந்த ஆண்டு முடக்கப்பட்டுள்ளன.

2022ல் 79 லாட்டரி வழக்குகளும், 2023ம் ஆண்டு 534 லாட்டரி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் வைத்து சூதாடியதாக கடந்த 2022ம் ஆண்டு 102 வழக்குகளும், 2023ம் ஆண்டு 370 வழக்குகளும் பதிவாகி உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினரின் கடின உழைப்பால், 2023ம் நடந்த குற்ற வழக்குகளில் 94 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் களவு சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், போலீசார் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையால், விபத்துகள் குறைக்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், ரவுடியிசம், வழிப்பறி, கொள்ளை, கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கடந்த 2023ம் ஆண்டில் 94 சதவீத குற்ற வழக்குகளில் களவு சொத்துக்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : SP Thangadurai ,Krishnagiri ,Krishnagiri district ,SP ,Hosur ,Dhenkanikottai ,Barkur ,Udhangarai ,Dinakaran ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...