×

தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு மீன் வியாபாரிகள் விடிய விடிய மறியல்

*மார்த்தாண்டத்தில் பரபரப்பு

மார்த்தாண்டம் : குமரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான பகுதியாகவும் மக்கள் அதிகம் கூடும் இடமாகவும் மார்த்தாண்டம் நகர பகுதி இருந்து வருகிறது. இங்கு பிரதான காய்கறி மற்றும் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது அதிக மக்கள் கூடுவதால் மார்க்கெட்டில் எப்பொழுதும் நெருக்கடியாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சந்தையை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து நகர் மன்ற தலைவர் பொன். ஆசை தம்பியின் முயற்சியால் ரூ.14.60 கோடி செலவில் நவீன மார்க்கெட் அமைப்பதற்கான பணியை கடந்த 3ம் தேதி அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். தற்போது மார்க்கெட்டில் பணியை தொடங்குவதற்காக அருகாமையில் உள்ள லாரி பேட்டை தற்காலிக காய்கறி சந்தையாக மாற்றும் பணி நேற்று தொடங்குவதாக இருந்தது. அந்த லாரி பேட்டையில் கடந்த சில வருடங்களாக மீன் இறக்கு தளமாகவும், மீன் கமிஷன் கடையாகவும் வெளியூரிலிருந்து மீன்களைக் கொண்டு வந்து இறக்கி விற்பனை செய்து வந்தனர். மீன் விற்பனைக்கு மார்க்கெட்டில் தனி மீன் சந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் லாரி பேட்டையில் தற்காலிக காய்கறி கடை அமைக்க பணி தொடங்க சென்ற போது, மீன் வியாபாரிகள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு தற்காலிக காய்கறி மார்க்கெட் பணி தொடங்க முடியாமல் போனது. இதை அடுத்து அங்கு பதட்டமும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மீனவர்களும் வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மொத்த மீன் வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி அந்த பகுதியில் குவிந்தனர். இது சம்பந்தமாக காவல்துறை, நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் திடீரென மார்தாண்டம் கருங்கல்- சாலையில் மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை ஒரு மணிநேரமாக நீடித்த போராட்டத்தால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளானார்கள். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலையில் இருந்து எழுந்த போராட்டகாரரர்கள் சாலை ஓரமாக நின்று போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் போராட்டம் இரவும் நீடித்தது.

இதையடுத்து இரவு 10.30 மணியளவில் விஜய் வசந்த் எம்.பி மற்றும் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மொத்த விற்பனை செய்யும் மீனவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து நகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மீனவர் பிரதிநிதிகளிடம் கலெக்டர் மற்றும் ஆர்டிஓ உட்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என போராட்டக்காரர்களிடம் கூறப்பட்டது. ஆனாலும் மீனவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். இதை அடுத்து அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

பேச்சு வார்த்தையில் உடன்பாடு

இதனிடையே மார்த்தாண்டம் மீன் மொத்த மார்க்கெட் தொடர்பாக நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. குழித்துறை நகராட்சி சார்பில் ஆணையாளர் ராம திலகம், ஓவர்சியர் விஜயராஜ், விளவங்கோடு தாசில்தார் குமாரவேல் பங்கேற்றனர். மீன் மொத்த வியாபாரிகள் மூன்று பேர் உட்பட பலர் பங்கேற்றனர்.பேச்சுவார்த்தையில், லாரி பேட்டையில் மீன் மொத்த வியாபாரம் மீண்டும் செயல்பட 20 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்குள் மாற்று இடத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்தப் பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படும். நவீன காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி முடிந்த பிறகு இது தொடர்பாக குழித்துறை நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வந்து முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு 6 மொத்த வியாபாரிகளும் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.

The post தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு மீன் வியாபாரிகள் விடிய விடிய மறியல் appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Kumari district ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...