×

சேரன்மகாதேவி வெள்ளநீர் கால்வாயில் கல் உடைப்பு நள்ளிரவில் 3 பேரை மடக்கி பிடித்த சப்.கலெக்டர்

*5 டாரஸ் லாரிகள், 2 டிராக்டர்கள், இயந்திரம் பறிமுதல்

வீரவநல்லூர் : சேரன்மகாதேவியில் வெள்ளநீர் கால்வாயில் இயந்திரம் மூலம் கல் உடைத்த 3 பேரை சப்.கலெக்டர் நள்ளிரவில் மடக்கி பிடித்தார். இதையடுத்து கல் உடைக்கும் இயந்திரம், 2 டிராக்டர், அதிகபாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரிகளையும் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார்.நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சப்.கலெக்டராக இருப்பவர் ஆர்பித் ஜெயின்.

இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சப்.கலெக்டர் பங்களாவில் இருந்த போது சுமார் 12 மணியளவில் சேரன்மகாதேவி – களக்காடு சாலையில் உள்ள வெள்ளநீர் கால்வாயில் இயந்திரங்கள் மூலம் கற்கள் உடைக்கப்படும் சப்தத்தை கேட்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதிக்கு சப்.கலெக்டர் நள்ளிரவில் ரோந்து சென்றார். அங்கு ராட்சத இயந்திரம் மூலம் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 நபர்களை பிடித்து விசாரனை நடத்தினார்.

இதில் முறையான ஆவணங்கள் இல்லாததால் பணியிலிருந்த 3 நபர்கள், கல் உடைக்கும் இயந்திரம், 2 டிராக்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சேரன்மகாதேவி போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து சேரன்மகாதேவி ரவுண்டானா பகுதியில் சப்.கலெக்டர் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட 5 டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தார். விசாரணையில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து முக்கூடல் பகுதியிலிருந்து அதிக பாரம் கல் லோடு ஏற்றி வந்த 5 டாரஸ் லாரிகளையும் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக மண்டல துணை தாசில்தார் சீதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது வழக்குப்பதிந்து டாரஸ் லாரி டிரைவர்களான கேரளாவைச் சோந்த ஷாமில்(32), ஆசிக்(24), ஜாகீர்(31), பிரதீப்(39), ஷாஜி(40) ஆகிய 5 பேரையும் கைது செய்து, லாரிகளில் இருந்த 23 யூனிட் குண்டு கற்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சேரன்மகாதேவி வெள்ளநீர் கால்வாயில் கல் உடைப்பு நள்ளிரவில் 3 பேரை மடக்கி பிடித்த சப்.கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Sub-Collector ,Cheranmahadevi ,Veeravanallur ,Cheranmakhadevi ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு