×

மாவட்டத்தில் 445 ஊராட்சிகளுக்கு இணையத்தள சேவை

சிவகங்கை, பிப்.7: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகள், 12ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இணையத்தள சேவை வழங்கும் பணி சில மாதங்களில் முடிவடைய உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 445ஊராட்சிகள், 12ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு(டான்பி நெட்) நிறுவனம் பாரத்நெட் திட்டம் பகுதி 2கண்ணாடி இழை மூலம் இணையதள சேவை வழங்கும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இணையதள வசதிக்காக அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள் தரை வழியாகவும், மின்கம்பங்கள் மூலமாகவும் இணைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதால் சில மாதங்களில் அனைத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் கண்ணாடி இழை விரைவு இணையத்தள சேவை தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் உள்ள அறையை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின்வசதி உள்ளதை உறுதி செய்யும் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் பொறுப்பாக்கப்பட்டுள்ளார். இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் இணையதள வசதி மூலம் பெறப்படும் தமிழ்நாடு அரசு இணையதள சேவைகளை ஊரகப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அவர்கள் வசிக்கும் ஊராட்சியிலேயே முழுமையாக பெற இயலும்.

மேலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் டான்பிநெட் உபகரணங்கள்(மின்கலன், இன்வெர்ட்டர், ரூட்டர் மற்றும் கண்ணாடி இழை) தமிழ்நாடு அரசின் உடைமையாகும். இவைகளை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாவட்டத்தில் 445 ஊராட்சிகளுக்கு இணையத்தள சேவை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு