×

அரிமளம் அரசு பள்ளியில் மின் வயர் திருட்டு

 

திருமயம்,பிப்.7: அரிமளம் அரசு பள்ளிகளில் மின் வயர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரிமளம் சந்தைப்பேட்டை பகுதியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு குடிநீர் வழங்க ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் கொண்டு நீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் மின்மோட்டார் வயர்களை அறுத்து திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரிமளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மின் வயர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடைய ஏற்கனவே அரிமளம் அரசு மருத்துவமனையில் இது போன்ற மின் வயர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் எனவே மின் வயர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அரிமளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குப்பைகளில் கிடக்கும் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பதாக ஐந்து பெண்கள் சாக்குப்பையுடன் சுற்றி உள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண்கள் அனைவரும் பழைய இரும்பு, பிளாஸ்டிக் சேகரித்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பெண்கள் ஐந்து பேரையும் போலீசார் விசாரணைக்கு பின் விடுவித்தனர்.

 

The post அரிமளம் அரசு பள்ளியில் மின் வயர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Arimalam ,Government School ,Thirumayam ,Arimalam government ,Pudukottai ,District ,Arimalam Government Girls Higher Secondary School ,Arimalam Market Pettah ,Union ,
× RELATED அரிமளம், திருமயம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலுக்கு கருகும் தைலமரங்கள்