×

அடுத்த 5 ஆண்டுகளில் இயற்கை எரிவாயு துறையில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடி நம்பிக்கை

பெதுல்: ‘அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இயற்கை எரிவாயுத் துறையில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். கோவா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஓஎன்ஜிசி கடல் வாழ் உயிரின மையத்தை திறந்து வைத்து, பெதுலில் நடந்த 2ம் ஆண்டு இந்திய எரிசக்தி வார விழாவில் பங்கேற்றார். இத்துறை சார்ந்த பல்வேறு நிறுவன சிஇஓ மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி பேசியதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதத்தை தாண்டி உள்ளது. எதிர்காலத்திலும் இதே போல வளர்ச்சி நீடிக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. எனவே உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும் என உலகம் முழுவதும் உள்ள பொருளாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தாண்டிய இந்தியாவின் வளர்ச்சியானது எரிசக்தி தேவையை அதிகரித்து வருகிறது.

2045ம் ஆண்டுக்குள் நாட்டின் எரிசக்தி தேவை இரட்டிப்பாக இருக்கும். இந்த எரிசக்தி தேவையானது, வழக்கமான எரிபொருள்கள் மற்றும் உயிரி எரிபொருள் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிபொருள் ஆதாரங்கள் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அடுத்த தலைமுறை எரிபொருட்களின் கலவை மூலமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். மேலும், நிலையான அடிப்படையில் அனைவருக்கும் மலிவு விலையில் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முயற்சியாகும். இந்தியா எரிசக்தி துறையில் எப்போதுமில்லாத முதலீடுகளை பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி உயர்ந்துள்ளது. முதன்மை எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை6.3 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இத்துறையில் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் சுமார் 67 பில்லியன் டாலர் (ரூ.5.5 லட்சம் கோடி) முதலீட்டைக் காணலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

The post அடுத்த 5 ஆண்டுகளில் இயற்கை எரிவாயு துறையில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடி நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Modi ,Goa ,ONGC ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…