×

‘விளம்பரம் பார்த்தால் பணம்’ என கூறி ரூ.20,000 கோடி வசூல் கோவை மோசடி நிறுவனத்துடன் பாஜ ஆதரவாளருக்கு தொடர்பு: 2 ஆண்டில் இவ்வளவு பணம் குவித்தது எப்படி?

கோவை: ‘விளம்பரம் பார்த்தால் பணம்’ என கூறி ரூ.20,000 கோடி வசூல் செய்த கோவை மோசடி நிறுவனத்துடன் பாஜ ஆதரவாளருக்கு தொடர்பு அம்பலமாகி உள்ளது. கோவையில் உள்ள மைவி 3 ஆட்ஸ் என்ற எம்எல்எம் நிறுவனம் ‘விளம்பரம் பார்த்தால் பணம், உறுப்பினர்களை சேர்த்தால் பணம்’ என கூறி லட்சக்கணக்கானோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 29ம் தேதி கோவை நீலாம்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். சட்ட விரோதமாக கூட்டம் கூட்டியதற்காக மைவி 3 ஆட்ஸ் நிர்வாக இயக்குநரான பீளமேடு பகுதியை சத்தி ஆனந்தன் (36) என்பவர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் சத்தி ஆனந்தன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவில் விசாரணைக்கு நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த நிறுவனம் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிறுவனத்தை சத்தி ஆனந்தன் தொடங்கவில்லை. நெல்லை மாவட்டம் ஏனாந்தாளை சேர்ந்த விஜயராகவன் (43), இவரது சகோதரி குமாரி, சிவசங்கர் ஆகியோர் கடந்த 2021ம் ஆண்டு மதுரையில் தொடங்கி உள்ளனர். சத்தி ஆனந்தன், விஜயராகவன் ஆகியோர் உறவினர் என கூறப்படுகிறது. இந்த நிறுவனம் மீது அமுதா ராணி என்பவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, விஜயராகவன் நிறுவனத்தை சத்தி ஆனந்தனிடம் ஒப்படைத்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. சத்தி ஆனந்தன் இந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங் டைரக்ராக இருந்து அதற்கு பின்னர் இந்த நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உள்ளார். இந்த நிறுவனத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் முதலீடு செய்திருப்பதாக தெரிகிறது. முதலீட்டு தொகை 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் என்றும், இதற்காக 200 நிறுவனங்களை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
மைவி3 ஆட்ஸ் செயலியை 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் டவுன்லோட் செய்திருப்பதாக தெரிகிறது.

2 ஆண்டு காலத்தில் இவ்வளவு முதலீடு எந்த நிறுவனத்திற்கும் கிடைக்கவில்லை. அன்னூரை சேர்ந்த சி.டி.ரவி என்பவர் பாஜவை சார்ந்த பிஎஸ்எஸ் அமைப்பின் நிர்வாகியாக இருக்கிறார். இவர்தான் புதுச்சேரியில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் தான் வசியமாத்திரைகள் தயாரித்து மைவி 3 ஆட்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்து உள்ளார். இவர் மூலமாக பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரை சத்தி ஆனந்தன் சந்தித்து பேசி உள்ளார். இதனால் இந்த நிறுவனத்துக்கும், முதலீடுகளுக்கும், பாஜவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏன் ஏன்றால், இவ்வளவு ஆயிரம் கோடி முதலீடுக்கு அவர் முறையாக ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த முதலீடுகளை மறைக்கவே நூற்றுக்கணக்கான துணை நிறுவங்களை சத்தி ஆனந்தன் தொடங்கி கணக்கு காட்டி உள்ளார். இதற்காக இவர் பாஜ தலைவர்களை சந்தித்து தன்னை பாதுகாத்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, இந்த முதலீடு மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post ‘விளம்பரம் பார்த்தால் பணம்’ என கூறி ரூ.20,000 கோடி வசூல் கோவை மோசடி நிறுவனத்துடன் பாஜ ஆதரவாளருக்கு தொடர்பு: 2 ஆண்டில் இவ்வளவு பணம் குவித்தது எப்படி? appeared first on Dinakaran.

Tags : BAJA SUPPORTER ,KOWAI ,MyV3 ,Baja ,Dinakaran ,
× RELATED ஜூலை 1ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!