×

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காவலர் உடற்தகுதி தேர்வில் 256 பேர் தேர்வு

காஞ்சிபுரம்:தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறைக்காவலர், கிரேடு 2 காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வில், தேர்வானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் சரகத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் தேர்வான 400 பேருக்கு நேற்றைய உடல் தகுதி தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 86 பேர் பங்கேற்காததால் 314 தேர்வர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இத்தேர்வு பிப்.6ம் தேதி தொடங்கி பிப்.9ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. அதனடிப்படையில், முதல் நாளான நேற்று, 400 தேர்வர்கள் அழைக்கப்பட்டு, வருகை தந்த 314 பேருக்கு கல்வி சான்றிதழ் சரிபார்ப்பு, எடை, உயரம் மற்றும் மார்பளவு கணக்கிடும் தேர்வு நடைபெற்றது. இதில், 256 பேர் உடற்தகுதி தேர்வில் தேர்வாகி உள்ளனர். 58 பேர் தகுதி இழந்துள்ளனர். தேர்வு பணியையொட்டி, அப்பகுதி முழுவதும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வர்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதில், ஏதேனும் குறைபாடுகள் என தேர்வர்கள் கருதினால், அங்குள்ள அதிகாரியிடம் முறையிட்டால் மீண்டும் டிஜிட்டல் முறையில் அவர்களின் உயரம், மார்பளவு உள்ளிட்டவை சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம், அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தேர்வு பணிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட காவல் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் இன்று (பிப்.7) நடைபெறுவதாக இருந்த உடற்தகுதி தேர்வு (9.2.2024) நாளை மறுநாள் நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவேம்தேதி (இன்று) நடைபெறவிருக்கும் உடற்தகுதி தேர்விற்கு கலந்துகொள்ள வரும் தேர்வர்கள் பிப்.9ம்தேதி காலை 6 மணிக்கு ஆஜராகும்படி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காவலர் உடற்தகுதி தேர்வில் 256 பேர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Kanchipuram ,Jail Guard ,Constable ,Fireman ,Tamil Nadu Uniformed Staff Selection Commission ,Kanchipuram District Sports Hall ,Kanchipuram, Thiruvallur ,
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...