×

உடல் பருமனை கிண்டல் செய்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: கணவனிடம் போலீசார் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே, உடல் பருமனை கணவன் கிண்டல் செய்ததால், மனைவி தீக்குளித்து தற்கொலை முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமம், எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (33). டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு, துர்கா (26) என்ற மனைவியும், ஆஷிதா, நித்திகா என 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் மணிகண்டன் சாப்பிட்டுகொண்டு இருந்தார். அப்போது மணிகண்டன், துர்காவின் உடல் பருமனை கிண்டல் செய்துள்ளார். இதனால், கோபமடைந்த துர்கா இதுபோன்று கிண்டல் செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

இதனை, அலட்சியம் செய்த மணிகண்டன் செயலால் ஆத்திரமடைந்த துர்கா, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊத்திக்கொண்டு தீ வைத்துக்கொள்வதாக மிரட்டி உள்ளார். இதனைகண்ட மணிகண்டன், துர்காவை சமாதானம் செய்து அறைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், சமையல் அறைக்கு சென்ற துர்கா மீது கேஸ் அடுப்பில் இருந்து திடீரென அவரது உடலில் தீப்பிடித்துள்ளது. துர்காவின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த மணிகண்டன், தீயை அணைத்து பொதுமக்கள் உதவியுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு, துர்காவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார், மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உடல் பருமனை கிண்டல் செய்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: கணவனிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Venkadu ,Behanayamman Koil Street ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே 9 பசு மாடுகள்...