×

ஓஎம்ஆர்., ஈசிஆர் சாலைகளில் குட்கா பொருட்கள் விற்பனை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்போரூர்: ஓஎம்ஆர்., ஈசிஆர் சாலைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்தில் பான்பராக், ஹான்ஸ், குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிகரெட், பாக்கு வகைகள் போன்றவற்றை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யவும் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகே கடைகளில் விற்கவும் தடை உள்ளது.

ஆனால், பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ஓஎம்ஆரில் உள்ள நாவலூர், ஏகாட்டூர், படூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய இடங்களிலும், கிழக்கு கடற்கரை சாலை எனப்படும் ஈசிஆரில் கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை, வட நெம்மேலி ஆகிய இடங்களிலும் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ், குட்கா போன்ற பொருட்கள் சிறிய வகை பெட்டிக்கடை முதல் பெரிய வகை மளிகை கடைகள் வரை சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்த பட்சம் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படும் இந்த பொருட்களை அதிக விலை என்று தெரிந்தும் போதை பழக்கத்தால் விட முடியாத இளைஞர்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 100 ரூபாய் வரை இந்த போதை பொருட்களை பயன்படுத்த இளைஞர்கள் செலவழிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த, கடைகளுக்கு சென்னையில் இருந்துதான் இப்போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக தெரிகிறது. உள்ளூர் போலீசாருக்கும், உணவுப் பொருட்கள் கட்டுப்பாடு கண்காணிப்புக் குழுவினருக்கும் இந்த விற்பனை குறித்த தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.

இதன் காரணமாக, மறைமுகமாக விற்பனை செய்யப்பட்ட இந்த போதைப் பொருட்கள் கடைகளில் தொங்க விடப்பட்டு வெளிப்படையாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவற்றை சகஜமாக வாங்கி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பள்ளிக்கு செல்லும் போதே ஒரு வகையான போதையுடன் செல்வதால் படிப்பில் கவனம் செலுத்துவது குறைவதோடு, உடல் நலத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, பள்ளி வளாகங்களில் அருகில் உள்ள கடைகளிலும் இந்த பொருட்கள் விற்பனை செய்யப் படுகின்றன. ஆகவே காவல்துறையும், உணவுப் பொருட்கள் கட்டுப்பாடு கண்காணிப்புக் குழுவினரும் ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் உள்ள கடைகளில் விற்கப்படும் இந்த தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* மாணவர்களுக்கு விற்பனை
கடந்த சில வருடங்களாகவே ஓஎம்ஆர்., ஈசிஆர் சாலைகளில் உள்ள கல்லூரி மாணவர்கள், வாலிபர்களை மையமாக வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சிலர் இந்த சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து அவற்றை பொட்டலமாக மாற்றி 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பலரும் இந்த போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு கஞ்சா போதையில் உள்ள பலரும் தங்களின் பணத்தேவைக்காக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்றவற்றிலும் ஈடுபட்டு குற்றவாளிகளாக மாறுகின்றனர்.

The post ஓஎம்ஆர்., ஈசிஆர் சாலைகளில் குட்கா பொருட்கள் விற்பனை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Gutka ,Tiruppurur ,OMR ,ECR ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது