- திருவள்ளூர்
- திருத்தணி
- ஸ்கோலிபட்டு
- ஆர்.கே
- அமைச்சர்
- ஆர்.
- காந்தி
- திருவள்ளூர் சட்டமன்றம்
- திருவள்ளூர், திருத்தானி
திருவள்ளூர்: திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் 8,020 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். இதுவரை மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 26 ஊராட்சிகளைச் சேர்ந்த 1,600 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கும் முகாம் திருவள்ளூரில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், கோட்டாட்சியர் (பொ) ஐவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். முகாமில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1,600 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவில் 100 இடங்களில் சிறப்பு பட்டா வழங்கும் முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் திருவள்ளூர் தொகுதியில் உள்ள ஏழை, எளிய பயனாளிகளைத் தேர்வு செய்து பட்டா வழங்க முடிவு செய்யப்பட்து. இந்நிலையில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 26 ஊராட்சிகளில் உள்ள 1,600 பயனாளிகளுக்கு ரூ.47 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் உங்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையும், இந்த திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக செய்த சாதனைகளையும் நினைத்துப் பார்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஒரு புடவை வாங்குவதற்கே பல முறை யோசிக்கும் பெண்களாகிய நீங்கள், ஒரு நல்ல ஆட்சி அமைய யோசித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், மோ.ரமேஷ், ச.மகாலிங்கம், நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், நேதாஜி, மிஸ்டர் தமிழ்நாடு டி.ஆர்.திலீபன் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டங்களில், வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணை வழங்கும் நிகழ்ச்சிகள் கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் திருத்தணி கோட்டாட்சியர் தீபா முன்னிலை வகித்தனர். திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் எம்எல்ஏ எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டு, 3 வட்டங்களில் 6,420 பயனாளிகளுக்கு இலவச வீட்டுபனை பட்டா ஆணை வழங்கினர்.
இதில் ஆர்.கே.பேட்டை வட்டம் சார்பில் அண்ணாமலை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணை வழங்கி பேசுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறையினர் சிறப்பாக செயல்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், வட்டாட்சியர் விஜயகுமார், ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ், ஒன்றிய திமுக செயலாளர்கள் பழனி, சண்முகம், சுப்பிரமணியம், ரகு, சம்பத், சுப்பிரமணி, செங்குட்டுவன், உமாபதி, சிவக்குமார், வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
The post திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் 8,020 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா: இதுவரை 15 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.